convicted

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரும் மனு மீதான வாதம் உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இதில் காலதாமதமாக முடிவு எடுத்ததால் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் 3 பேர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

நேற்று தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் மனு மீதான விசாரணை தொடங்கியது.

இதில் ராஜீவ் கொலையாளிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி, யுக்முத் சவுத்திரி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார் லூத்ரா விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குடியரசுத் தலைவர் காலதாமதமாக முடிவு எடுத்ததால் தண்டனையை குறைக்கலாம் என்று கடந்த 21 ஆம் தேதி வீரப்பன் கூட்டாளிகள் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து மத்திய அரசு மறு ஆய்வு மனுதாக்கல் செய்தது பற்றி பரிசீலித்து வருகிறது. எனவே விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இதை நீதிபதிகள் ஏற்க மறுத்து வழக்கறிஞர்கள் வாதத்தை தொடர உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து ராம்ஜெத் மலானி வாதாடினார். இன்று 2-வது நாளாக வாதம் நடந்தது. இத்துடன் ராஜீவ் கொலையாளிகளின் வழக்கறிஞர் வாதம் முடிந்தது. வருகிற 4 ஆம் தேதி மத்திய அரசு வழக்கறிஞரின் வாதம் தொடங்குகிறது. அதன் பிறகு தீர்ப்பு வெளியாகும்.

Loading