தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி பிரதமர், ஆளுநர் மற்றும் முதலமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களும் தமிழ் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி,  வாழ்த்து செய்தியில்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வாழ்த்து செய்தியில்

தமிழ்ப் புத்தாண்டு தினமானது, நமது மக்களிடையே அமைதி, வளம், மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தாண்டு தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை, நற்சிந்தனை, வெற்றி ஆகியவற்றை தழைத்தோங்கச் செய்யும்.

 முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, வாழ்த்து செய்தியில்

பெருமை கொண்ட தமிழ்க் குடிமக்கள், ஆண்டாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடி வந்தனர். அந்த மரபினை மாற்றிய செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ் மக்களின் உளப்பூர்வ விருப்பத்தின்படி சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திருநாள் என்ற உரிமையை மீட்டெடுத்த பெருமைக்குரியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில், அவரது வழியில் செயல்படும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும், நலத் திட்டங்களையும் மக்கள் அனைவரும் முறையாகப் பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதுடன், வலிமையும் வளமும் மிக்க தமிழ்நாட்டை படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும்.இந்தப் புத்தாண்டில், தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும். நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும்.

சு.திருநாவுக்கரசர், வாழ்த்து செய்தியில்

ஸ்ரீ விளம்பி ஆண்டு பிறப்பதை முன்னிட்டு உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இப்புத்தாண்டில் தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்னையான காவிரி நதி நீர்ப் பிரச்னைக்கு தீர்வு அமைந்திடும் விதத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு விவசாயிகள் துயர் அகன்று வாழ்வு செழித்திட வேண்டும்.

விஜயகாந்த், வாழ்த்து செய்தியில்

இயன்றதை செய்வோம், இல்லாவதற்கே என்ற கொள்கையோடு, தமிழகம் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்கள் சாதி, மதத்திற்கு அப்பார்ப்பட்டு, நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடு, இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற வேறுபாடுடின்றி, அமைதியாக, ஆரோக்கியத்துடன் எல்லா வளமும், எல்லா நலனும் பெற்று நாம் அனைவரும் வாழவேண்டும் என்று தேமுதிக சார்பில் எனது மனமார்ந்த ‘விளம்பி’ வருட தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ராமதாஸ், வாழ்த்து செய்தியில்

வசந்த காலம் தொடங்குவதை தமிழ் மண்ணுக்கு எடுத்துக் கூறும் சித்திரை திருநாளைக் கொண்டாடும் தமிழர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். புத்தாண்டில் கொண்டாட்டங்களில் திளைக்க வேண்டிய தமிழகம், அதன் உரிமைகளைக் காக்கவும் மீட்கவும் கொளுத்தும் வீதிகளிலும் சாலைகளிலும் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றனர். சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடைய விழா. எனவே, காவிரி பிரச்னை உள்பட தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் எல்லா தீமைகளும் விரைவில் அகலும்.

வைகோ, வாழ்த்து செய்தியில்

காவிரிப் பிரச்னை, நியூட்டிரினோ, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், சேல் கேஸ் என தமிழகத்தைப் பாலைவனமாக்கும் பேரழிவுத் திட்டங்களை மத்திய அரசு வகுத்து வரும்போதும், அவை அனைத்தையும் எதிர்த்துப் போராடும் உறுதியை தமிழகம் பெற்றுள்ளது. தமிழக விவசாயிகளுக்கு வசந்தம் பிறக்கும்; வாழ்வு சிறக்கும் என்ற நம்பிக்கையை சித்திரைத் திருநாள் விதைக்கட்டும். உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் சித்திரை முதல்நாள் வாழ்த்துகள்.

டிடிவி தினகரன், வாழ்த்து செய்தியில்

தமிழ்ப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும், நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், நம்பிக்கைகள், முயற்சிகள் தழைத்து, செழித்து, பெருகி, வளர்ந்து நற்பலன் தரட்டும்.

தமிழகத்தின் நெடிய பெருமையையும் இயற்கை அன்னை வழங்கிய வளங்களையும், நம் மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்கும் ஆண்டாக இந்த ஆண்டை அமைத்து, நம் தாய் தமிழ்நாட்டின் சிறப்புக்கு ஏற்பட்ட இடர்கள் அத்தனையும் களைந்து, தமிழக மக்களின் பெருவாழ்வுக்கு எதிரான சூழ்ச்சிகள் அனைத்தையும் முறியடிப்போம். நமது வெற்றி வரலாற்றை நிலைநாட்டி தலைநிமிர்ந்த தமிழகத்தை, வளமான மக்கள் வாழ்வை அமைத்திட உறுதி ஏற்போம்.

தமிழிசை சௌந்தரராஜன், வாழ்த்து செய்தியில்

தமிழ்ப் புத்தாண்டு விளம்பி மலர்கிறது. தமிழர்கள் வாழ்வில் மேன்மையுற, ஏற்றமடைய, மங்காத செல்வமும், நீர்வளமும் பெற்றிட தமிழ்ப் புத்தாண்டு வழிகோலும். பிரதமர் நரேந்திர மோடி அரசின் நல்ல திட்டங்களை தமிழகம் பின்பற்றும் புத்தாண்டாக இது மலர வேண்டும். இதுவரை 50 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட காவிரி இப்போது பாஜக ஆட்சியில் விரைவில் தமிழகமெங்கும் பாய்ந்தோடி தமிழர்கள் வாழ்வில் குதூகலத்தைப் பாய்ச்ச உள்ளது.

ஜி.கே.வாசன், வாழ்த்து செய்தியில்

தமிழர்களின் புத்தாண்டில் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகள் நீங்கி, சட்டத்துக்கு உட்பட்டு தண்ணீர் கிடைக்கக் கூடிய நிலை ஏற்பட வேண்டும். இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து துறையைச் சேர்ந்த மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும். இதற்கு அரசியல் மாட்சியங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

கமல் ஹாசன், வாழ்த்து செய்தியில்

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். அண்ணல் அம்பேத்கா் பிறந்த நாளில், அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழி நடப்போம் என்று உறுதி ஏற்போம். மத்திய, மாநில அரசுகளும் அந்த அரசியல் சாசனத்தைப் பின்பற்றி, தமிழா்களின் கோாிக்கை நிறைவேறும் வகையில் காவிாி மேலாண்மை வாாியம் அமைந்திட வேண்டும் என்று முழங்குவாம்

ரஜினிகாந்த், வாழ்த்து செய்தியில்

உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும்; புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Loading