மைனா, கும்கி வெற்றிகளுக்கு பிறகு வித்தியாசமான கதைக் களத்தில் பிரபு சாலமன் இயக்கும் படம் கயல். இதில் சந்திரன், வின்சென்ட், ஆனந்தி என முற்றிலும் புதுமுகங்களே நடிக்க, பிரபுசாலமனின் ஆஸ்தான நடிகர் தம்பி ராமையா இந்தப் படத்தில் இல்லை. அவருக்கு பதிலாக சொல்லுங்கன்னே! சொல்லுங்க! இமான் அண்ணாச்சியை களமிறக்கி இருக்கிறார். முந்தைய படங்களைப்போல இதுவும் காதல் கதைதான். ஆனால் அதை சுனாமி பாதிப்புகளின் பின்னணியில் சொல்லியிருக்கிறார்.
படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ‘கயல்’ என்ன மாதிரியான படம் என்று கேட்டால், “சுனாமி தாக்கி சரியாக பத்தாண்டுகளாகி விட்டது அந்த சுனாமியை இதில் கதைக்கருவாக்கி இருக்கிறேன். இதில் காதல் இருக்கு என்றும் சொல்ல முடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது. ஆனால் வழக்கமான படம் இல்லை.
திரையில் கயல் படத்தை பார்க்கும் போது மனசு அப்படியே பதைபதைத்து போகும். 56 டிராக் இசை படத்தை இன்னும் பல மடங்கு பிரமிப்பூட்டும் விதமாக இருக்கும்.” என பேச்சிலேயே படத்தின் பிரம்மாண்டத்தை காட்டும் இவரிடம் . ‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’… அடுத்து என்ன மாதிரியான படத்தை எடுப்பதாக உத்தேசம் என்று கேட்டால் சற்றும் சிரிக்காமல் பதில் வருகிறது பிரபு சாலமனிடம் இருந்து.. “சிங்கத்தை வைத்து ஒரு புதிய முயற்சி எடுக்க எண்ணம் இருக்கு” என்று. கயல் படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.
![]()

