சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கவர்னர் ரோசையா, ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கவர்னர் ரோசையா: பொங்கல் மற்றும் சங்கராந்தி நன்நாளில் சுற்றுப்புறத்தை யும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க உறுதி ஏற்போம்.முதல்வர் ஜெயலலிதா: பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியுள்ள இந்த இனிய வேளையில், என் அன்புக்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக தலைவர் கருணாநிதி: தமிழகம் சந்தித்து வரும் பின்னடைவுகளுக்கும், தமிழகத்தில் அனைத்து வகைப் பொருள்கள் மீதும் விஷம் போல் ஏறியுள்ள விலைவாசிக் கொடுமைகளால் மக்கள் பட்டுவரும் அல்லல்களுக்கும், மத்திய அரசும், திமுகவுமே காரணம் எனக் கூறி, தமிழக மக்களை இன்றைய ஆட்சி கடந்த மூன்று ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறது. இந்த ஏமாற்றுக்காரர்களின் முகமூடிகளை இப்புத்தாண்டில் கிழித்தெறிவோம் என உறுதியேற்போம்.
விஜயகாந்த்(தேமுதிக): இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை தொடரும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, தமிழக மீனவர் பிரச்னை என பல்வேறு பிரச்னைகளில் தமிழகம் சிக்கி தவிக்கிறது. இந்நிலை மாற மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வாக்கின்படி, வரும் தேர்தல், தமிழக மக்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் திருப்புமுனையாக அமைய வேண்டும்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்: வறுமை நீங்கி வளம் பெறவும், இருள் நீங்கி ஒளிபெறவும், மனித நேயம் மலர்ந்திடவும், வளமான தமிழகமும், மத்தியில் மதவாதமும், பிரிவினைவாதமும் சூழ்ந்து கொள்ளாமல் காத்து வலிமையான பாரதத்தை அமைத்திட வேண்டும்.
ஞானதேசிகன் (காங்கிரஸ்): மக்களிடையே மனிதநேய நல்லிணக்கம் நிமிர்ந்து, ஒற்றுமை, சமாதானம் பெற்று மகிழ்வோம்.
கி.வீரமணி(திராவிடர் கழகம்): தமிழ் புத்தாண்டின் தொடக்கமான இப்பொங்கல் திருநாள்- திராவிடர் திருநாள்- உழைப்பினை போற்றி நன்றியை குவிக்கும் பொன்னாள்.
வைகோ (மதிமுக): தரணி எங்கும் வாழும் தமிழர்களுக்கு நேச உணர்வுடன் இனிய பொங்கல் வாழ்த்துக்களை மதிமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொன்.ராதாகிருஷ்ணன்(பாஜ): தமிழ் வளரவும், தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறவும், தமிழ் சமுதாயம் உலக அளவில் வல்லமை படைத்ததாக உருவாக இப்பொங்கல் நன்நாளில் உறுதி ஏற்போம்.
ராமதாஸ்(பாமக): தை முதல் நாளையே நாம் தமிழ் புத்தாண்டாக கொண் டாடி வருகிறோம். மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றத்திற்கு வித்திடும் ஆண்டாக இந்த தமிழ் புத்தாண்டு அமையும்.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): தாராளமயமாக்கல் கொள்கையால் நாடு பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறது. இந்த கொள்கை தான் இந்திய விவசாயத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக எழுந்துள்ளது. நாட்டின் இறையாண்மை, ஒற்றுமையை பாதுகாத்து சமத்துவ பொங்கல் வைக்க இந்திய இனிய நாளில் சபதமேற்போம்.
சரத்குமார்(சமக): தைத்திருநாளில், உலகமெங்கும் வாழும் தமிழர்கள் வளமோடும், மகிழ்ச்சியோடு வாழ்வாங்கு வாழ சமக சார்பில் வாழ்த்துகிறேன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் எச்.வசந்தகுமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்,பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிகட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம்,இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திருநாவுக்கரசர், அகில இந்திய டாக்டர் அம்பேத்கார் எஸ்சிஎஸ்டி கூட்டமைப்பு தேசிய தலைவர் ஆதிகேசவன், விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோசம், இந்திய தேசிய முஸ்லீம் லீக் தலைவர் ஓய்.ஜவஹர் அலி.
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை பணியாளர் சங்கம் தலைவர் மா.சண்முக ராஜா, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேது ராமன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன், அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் பொது செயலாளர் வீ.ரங்கநாதன், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்)சங்கம் தலைவர் சேம.நாராயணன், ஜனதாதளம்(ஐக்கியம்) தமிழ்நாடு தலைமை பொது செயலாளர் டி.ராஜ கோபால் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
![]()

