ஜூன் 21,மக்களின் ஏகோபித்த ஆதரவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் 16 வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா தலைமையிலான மோடி அமைச்சரவை தற்போது ரயில்வே துறையின் மூலம் தனது முதல் அறிக்கையை வெளிக்கொண்டு வந்துள்ளது.
அந்த வகையில் ரயில் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்குக் கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும் எனவும், வரும் புதன்கிழமை முதல் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகவும் ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசால், கடந்த மே 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, பிறகு தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் கட்டண உயர்வு தற்போது அமலுக்கு வருகிறது. புதிய கட்டண உயர்வு மூலம் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.8,000 கோடி வருவாய் கிடைக்கும்.
தில்லியில் வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டு ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கெளடா கூறுகையில், “”முந்தைய அரசு கொண்டு வந்த கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டியதன் காரணமாக, இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.
முந்தைய அரசின் உத்தரவை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான ஆணை விலக்கப்பட்டுள்ளதே தவிர, இது புதிய அரசின் முடிவல்ல” என்றார்.
இந்த புதிய கட்டண உயர்வு வரும் புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
![]()

