suprem

ஆகஸ்ட் 26, 1993ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

எனினும், இந்தத் தீர்ப்பால், ஏற்படும் விளைவுகள் குறித்து (நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து உள்ளிட்டவை) செப்டம்பர் 1ஆம் தேதி நடத்தப்படும் அடுத்த விசாரணையில் எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

இந்த நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலங்களில் வழங்கப்பட்டவையாகும்.

“சட்ட விரோதமாக 218 நிலக்கரிச் சுரங்கங்களுக்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டு அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’ என்று வழக்குரைஞர் எம்.எல். சர்மா, “காமன் காஸ்’ என்ற தொண்டு அமைப்பு ஆகியவை கடந்த 2012ஆம் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, மதன் பி. லோகூர், ஜோசப் குரியன் ஆகியோர் கொண்ட அமர்வு மேற்கண்ட தீர்ப்பை அளித்தது.

Loading