மார்ச் 10 மாயமாக மறைந்துபோன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு என்ன ஆனது என்பது இன்னமும் மர்மமாகவே உள்ள நிலையில், அந்த விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணித்த இரு பயணிகளும் யார் என்ற விசாரணையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளது, சர்வதேச போலீஸ், இன்டர்போல்.
“இந்த இரு பாஸ்போர்ட்டுகளை வைத்துக்கொண்டு எப்படி இரு பயணிகளால் விமானத்தில் ஏற முடிந்தது?” என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இன்டர்போல்.
இந்த இரு பயணிகளும் தமது பாஸ்போர்ட்டில், சீனாவுக்கான விசா எதையும், கோலாலம்பூர் விமான நிலைய மலேசியன் ஏர்லைன்ஸ் செக்-இன் கௌண்டரில் காட்ட வேண்டியது, அவசியமில்லை என்பது உண்மைதான். காரணம், இருவரும் பீய்ஜிங்கில் ட்ரான்சிட் பயணிகள். சீனா இமிகிரேஷனுக்கு போக அவசியமற்றவர்கள்.
ஆனால், பாஸ்போர்ட்?
அதை நிச்சயம் மலேசியன் ஏர்லைன்ஸ் செக்-இன் கௌண்டரில் சரிபார்த்திருப்பார்கள்.
இந்த இரு பாஸ்போர்ட்களும், ஆஸ்திரிய மற்றும் இத்தாலிய பாஸ்போர்ட்டுகள். இரண்டுமே வெள்ளை இன நபர்களின் பாஸ்போர்ட்டுகள். அதிலுள்ள பெயர்களும், இத்தாலிய மற்றும், ஆஸ்திரிய பெயர்கள் (கிரிஸ்டியன் கோசெல், லுய்கி மரால்டி). இந்த பெயர்களில் ஆசியர்களோ, அல்லது வேறு இனத்தவரோ (மேலை நாட்டவர்கள் ஏன் போலி பாஸ்போர்ட்டில் பயணிக்க வேண்டும்?) பயணம் செய்தால், எந்தவொரு விமான நிலைய அதிகாரிக்கும் உடனே சந்தேகம் ஏற்படும்.
ஒரேயொரு பாஸிபிளிட்டி உள்ளது. இரு பாஸ்போர்ட்டுகளிலும் உள்ள போட்டோக்களை மாற்றியிருக்கலாம். அப்போது, இந்த பெயர்களில் ஆசியர்களோ, அல்லது வேறு இனத்தவரோ இருக்க சான்ஸ் உள்ளது (இவ்விரு நாடுகளிலும் பிரஜாவுரிமை பெறுவதற்காக சிலர் பெயர்களை சட்டரீதியாக மாற்றுவதுண்டு)
ஆனால், தற்போதுள்ள பாஸ்போர்ட்டுகளில் போட்டோவை மாற்றினால், அதை பாஸ்போர்ட் செக்கிங் எந்திரம் சுலபமாக கண்டு பிடித்துவிடும்.
2005-ம் ஆண்டுக்குப் பின், ஆஸ்திரிய மற்றும் இத்தாலிய பாஸ்போர்ட்டுகளில் ‘ஆல்ட்டர் டிடெக்ட் ஃபீச்சர்’ என்ற அம்சம் உண்டு. பாஸ்போர்ட்டின் போட்டோ பக்கத்தில் உள்ள செலோஃபீன் சற்றே அகற்றப்பட்டாலும், பாஸ்போர்ட் ஸ்வைப் சாஃப்ட்வேர் அதை கண்டுபிடித்துவிடும். இந்த பாஸ்போர்ட் ஸ்வைப் சாஃப்ட்வேர்கள், கோலாலம்பூர் விமானநிலையத்தில் உள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் செக்-இன் கம்ப்யூட்டர்கள் அனைத்திலும் பொருத்தப்பட்டுள்ளன.
தவிர, இதே பயணிகள், மலேசியன் இமிகிரேஷனையும் கடந்து சென்றிருக்க வேண்டும். அங்கேயும், ஒவ்வொரு இமிகிரேஷன் அதிகாரியின் கம்ப்யூட்டரிலும் பாஸ்போர்ட் ஸ்வைப் சாஃப்ட்வேர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒன்றில் மிஸ் ஆனாலும், மற்றதில் இந்த இரு பாஸ்போர்ட்டுகளும் சிக்கியிருக்கும்.
இதை ஏமாற்ற முடியாதா? அதற்கும் ஒரு வழி உள்ளது.
ஆனால், அந்த வழியை இந்த இரு மர்ம பயணிகளும் பயன்படுத்தினார்கள் என்றால், அதற்கு விமான நிறுவனத்துடன் தொடர்புடைய ஒருவரின் உதவி அவசியம் தேவை.
மொத்தத்தில் மேலும் பல மர்மங்கள் இதில் உள்ளன என்று தெரிகிறது.
![]()

