திமுகவின் உட்கட்சி போர் உச்சக் கட்டத்தை அடைந்து கட்சியில் இருந்து மு.க.அழகிரி வெளியேற்றப்பட்டு இருப்பதால் அவர் புதிய கட்சி தொடங்க வாய்ப்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி 30-ந் தேதி அன்று மதுரை யில் நடைபெறும் மு.க.அழகிரியின் பிறந்த நாள் அன்று இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.
திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக பொறுப்பு வகித்த மு.க.அழகிரியை திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலி ருந்தும் தற்காலிகமாக திமுக தலைமை நீக்கி உள்ளது.
இதன் விளைவாக திமுகவில் உள்ள மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் திமுகவுக்கு எதிராக தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிகிறது.
திமுகவில் கருணாநிதியின் மகன்களான மு.க.அழகிரிக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் இடையே பல ஆண்டுகளாக அதிகாரப் போட்டி இருந்து வந்தது.
தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் கோஷ்டி பூசல் இருப்பது போல மாநிலத் தலைமையிலும் அண்ணன் – தம்பி கோஷ்டி பூசல் நீரு பூத்த நெருப்பாக இருந்து வந்தது. அது இப்போது வெடித்து கிளம்பி திமுகவுக்கு ஒரு மிகப் பெரிய நெருக்கடியை உருவாக்கி உள்ளது.
நேற்று திமுகவிலிருந்து மு.க. அழகிரியை சஸ்பெண்ட் செய்து பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடைசியாக ‘கழகத்தின் நன்மைக்காக தெரிவித்துள்ள “முடிவான” இந்த கருத்தினை கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஏற்று ஒற்றுமையோடும், கட்டுப்பாட்டோடும் கழகம் நடப்பதற்கு உடன்பிறப்புகள் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் முடிவான கருத்து என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதால் திரும்பவும் மு.க. அழகிரியையோ, அவரது ஆதரவாளர்களையோ திமுகவில் சேர்ப்பதில்லை என்ற முடிவுக்கு அக்கட்சியின் தலைமை வந்துவிட்டதாகவே கூறப்படுகிறது.
ஜனவரி 30-ந் தேதியோ, அதற்கு முன்னதாகவே திமுக தலைமைக்கு எதிராக மீண்டும் அழகிரியோ, அவரது ஆதரவாளர்களோ செயல்பட தொடங்கினால் அவர்களை கட்சியிலிருந்து முழுவதுமாக டிஸ்மிஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக திமுக வட்டாரம் தெரிவிக்கிறது.
அழகிரியின் பின்னால் திமுகவினர் யாரும் செல்லக்கூடாது என்பதற்காக அவருடைய சுமார் 30 ஆண்டுகால தொந்தரவுகளை கருணாநிதி சுமார் 10 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக தயாரித்து வைத்து இருக்கிறாராம்.
கட்சிக்கும் தமக்கும், ஸ்டாலினுக்கும் குடும்பத்திற்கும் எந்த அளவுக்கு அழகிரி துரோகம் இழைத்தார். டெல்லியிலும், தென் மாவட்டங்களிலும் கட்சிக்கு எதிராக எவ்வாறு செயல்பட்டார், கடந்த தேர்தல்களின் போது கட்சி அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக எப்படி செயல்பட்டார் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
தொடர்ந்து அழகிரி கட்சிக்கு எதிரான நிலையில் செயல்பட்டால் அவரை கட்சியிலிருந்து முழுவதுமாக நீக்கும்பொழுது இந்த பரபரப்பான அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிகிறது.
![]()

