சென்னை பெண் கொலையில் திடீர் திருப்பம்! இருவர் கைது

Two held in IT woman employee murder case

பிப்ரவரி 25: சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் சிறுசேரியில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் கொலை வழக்கு தொடர்பாக மேற்கு வங்க மாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, வாக்குமூலமும் அளித்துள்ளனர்.

கொல்லப்பட்ட உமா மகேஸ்வரியின் வங்கி கிரெடிட் கார்டை இருவரும் பயன்படுத்தியுள்ளனர். இதன் அடிப்படையிலேயே இவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் கட்டட தொழிலாளர்கள் ஆவர்.

மேலும் முக்கிய குற்றவாளிகள் 3 பேரும் கொல்கத்தா தப்பி ஓடிவிட்டதாகவும், அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் பலாத்காரத்திற்கு பின்னர் கொலை: கைதானவர்கள் வாக்குமூலம்
இந்நிலையில் கைதான 2 பேரும் அளித்துள்ள வாக்குமூலத்தில், பாலியல் பலாத்காரத்திற்கு பின்னரே அப்பெண் ஊழியரை கொன்றதாகவும், அவரிடமிருந்த செல்போன் மற்றும் வங்கி கிரெடிட் கார்டை திருடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளதாக இவ்வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட உமா மகேஸ்வரி பணியாற்றும் நிறுவனம் அமைந்திருக்கும் இடத்தின் அருகே கட்டட தொழிலாளியாக பணியாற்றி வந்த கொலையாளிகள், உமா மகேஸ்வரி மற்றும் அவருடன் பணியாற்றும் பணியாளர்கள் அவ்வழியாக செல்லும்போது கிண்டல்,கேலி செய்துள்ளனர். இதனை உமா மகேஸ்வரி ஒருமுறை தட்டிக்கேட்டபோது, அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் உமா மகேஸ்வரி சம்பவத்தன்று இரவில் தனியாக சென்றதை பார்த்துவிட்டு, அவரை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் உமா மகேஸ்வரியிடமிருந்து திருடப்பட்ட கிரெடிட் கார்டை பயன்படுத்தியபோது, கேமராவில் இருவரது முகம் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையிலேயே அவர்கள் பிடிபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கத்தை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் பொறியாளர் உமா மகேஸ்வரி, கடந்த 13ஆம் தேதி இரவு பத்து மணியளவில் தனது நிறுவனத்தில் இருந்து கிளம்பினார்.ஆனால் அவர் வீடு திரும்பாததையடுத்து இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு வாரம் கழித்து கடந்த 22 ஆம் தேதியன்று, சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அருகில் உள்ள புதரில் இருந்து அவரது சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்பட்ட நிலையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே இதுகுறித்து உறுதியான முடிவுக்கு வரமுடியும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

மேலும் பெண் பொறியாளர் கொலை வழக்கில், கொலையாளிகள் பற்றிய துப்பு கொடுப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் காவல் துறை அறிவித்திருந்தது.

இதனிடையே உமா மகேஸ்வரி கொலை சம்பவம் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி ஐடி நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையிலேயே இவ்வழக்கு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு