மார்ச்10, அறந்தாங்கி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக சென்னை செல்லும் ஒரு தனியார் பஸ்சில் தங்க கட்டிகள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு நேற்றுமுன்தினம் இரவு ரகசிய தகவல் வந்தது. இதன்பேரில், வாண்டாக்கோட்டை என்ற இடத்தில் அந்த பஸ்சை புலனாய்வுத்துறை அதிகாரிகள் மறித்து சோதனையிட்டனர். பஸ்சில் கிடந்த ஒரு பையை திறந்து பார்த்தபோது அதில் தங்க கட்டிகள் இருந்தது.
அந்த பையில் மொத்தம் 10 கிலோ 262 கிராம் தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பஸ்சில் வந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசவே சுங்கதுறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு இருவரிடமும் தங்கத்தை எங்கிருந்து கடத்தி வந்தனர் என்பது குறித்தும், முக்கிய பிரமுகர்களுக்கு இதில் எதுவும் தொடர்பு உள்ளதா எனவும் சுங்கதுறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்களது பெயர் விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.3 கோடியே 30 லட்சம் ஆகும்.
![]()

