ஏப்ரல் 01, சென்னை: தமிழகம்,புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்கிறார்கள்.
இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி தலைவர்கள் நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி போன்றவர்கள் நாடு முழுவதும் தங்களுடைய கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தொகுதி,தொகுதியாக பிரசாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் முதன் முதலில் காஞ்சிபுரத்தில் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் தற்போது தமிழகத்தில் பாதி இடங்களில் பிரசாரத்தை முடித்துவிட்டார். இன்று அவர் பொள்ளாச்சி, கோவை ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். இதேபோல் தி.மு.க., ம.தி.மு.க. பா.ஜ.க. தலைவர்களும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 24_ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் 63 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
முக்கிய கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்கள் முதல்நாளில் மனு தாக்கல் செய்யவில்லை. ஞாயிறு, திங்கள் இரு நாட்கள் விடுமுறை.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று (1ந்தேதி) பிற்பகல் 1.40 மணியில் இருந்து 3 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
தி.மு.க. வேட்பாளர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் 2 நாட்களில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதேபோல் பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க. வேட்பாளர்கள் நாளையும், பா.ம.க. வேட்பாளர்கள் 3ந்தேதியும், தே.மு.தி.க. வேட்பாளர்கள் 5ந்தேதியும் மனுதாக்கல் செய்கின்றனர்.பாரதீய ஜனதா வேட்பாளர்கள் நல்ல நாள், நேரம் பார்த்து நாளை முதல் மனுதாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதனால் இன்று முதல் தேர்தல் களம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]()

