poison

மே21,ஸ்ரீவில்லிபுத்தூரில் குளிர்பானம் என நினைத்து விஷத்தைக் குடித்த இளைஞர் உயிரிழந்தார். மேலும் இதனைக் குடித்த இவரது தங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் கு.மாரியப்பன் (60). இவருக்கு ஆனந்தராஜ் (20), ஆண்டாள்தேவி (17) என்ற இரு பிள்ளைகள் உண்டு. மாரியப்பன் தெருவில் கிடக்கும் பழைய பிளாஸ்டிக், இரும்பு, பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வீட்டில் மொத்தமாக சேரித்து, அதை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.மாரியப்பனும் அவரது மனைவியும் இல்லாத நேரம், சற்று மன நலம் பாதிக்கப்பட்ட இவர்களின் மகன் ஆனந்தராஜ், பழைய பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குளிர்பானம் என நினைத்து, குவளையில் ஊற்றி குடித்துள்ளார். மேலும் இதனைப் பார்த்த தங்கை ஆண்டாள்தேவியும் இதனை கொஞ்சம் வாங்கி குடித்துள்ளார்.

வெளியே சென்றிருந்த தாய் வந்தவுடன் இருவரும் வயிறு வலிப்பதாகக் கூறி, வாந்தி எடுத்துள்ளார்கள். இதனையடுத்து இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஆனந்தராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆண்டாள்தேவி தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Loading