நஸ்ரியா
நடிகை நஸ்ரியா, கேரளாவை சேர்ந்தவர். மலையாள படங்களில் நடித்து வந்த அவர், ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, ‘ராஜாராணி’ படத்தில் ஆர்யா ஜோடியாகவும், ‘நய்யாண்டி’ படத்தில் தனுஷ் ஜோடியாகவும் நடித்தார்.
‘நய்யாண்டி’ படம் திரைக்கு வருவதற்கு முன்பு அந்த படத்தின் டைரக்டர் சற்குணம் மீது நஸ்ரியா, சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்தார். ‘நய்யாண்டி’ படத்தில் தனக்குப் பதில் ஒரு துணை நடிகையை நடிக்க வைத்து படுகவர்ச்சியாக ஒரு காட்சியை படமாக்கியிருப்பதாக புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார். அந்த காட்சி நீக்கப்பட்டதை அடுத்து, நஸ்ரியா தனது புகாரை வாபஸ் பெற்றார். இந்த சம்பவம் தமிழ் பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெய்
நஸ்ரியா–ஜெய் நடித்த ‘திருமணம் எனும் நிக்கா’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் இருந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. அதை இரண்டு பேருமே மறுத்தார்கள். ‘‘ஜெய், நல்ல நண்பர்’’ என்று மட்டும் நஸ்ரியா கூறினார்.
இந்த நிலையில் நஸ்ரியாவுக்கும், பிரபல டைரக்டர் பாசிலின் மகன் பகத்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. பகத், மலையாள பட உலகில் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். நஸ்ரியாவும், பகத்தும் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள். இருவரும், ‘எல் பார் லவ்’ என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்து வந்தார்கள்.
திருமணம்
கடந்த 18–ந்தேதி கொச்சியில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவுக்கு நஸ்ரியா, பாசில் மனைவியுடன் வந்தார். இருவரும் அருகருகே அமர்ந்து இருந்தார்கள். அந்த விழாவில் பகத் கலந்து கொள்ளவில்லை. அவருக்குரிய சிறந்த நடிகருக்கான விருதை நஸ்ரியா பெற்றுக்கொண்டார். இது, விழா நடந்த மண்டபத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து நஸ்ரியா–பகத் திருமண அறிவிப்பை கொச்சியில், டைரக்டர் பாசில் வெளியிட்டார்.
‘‘நஸ்ரியாவுக்கும், பகத்துக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து இருக்கிறோம். வருகிற ஆகஸ்டு மாதம் 2–வது வாரத்தில், கேரளாவில் திருமணம் நடைபெறும். இது, காதல் திருமணம் அல்ல. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்’’ என்று அவர் கூறினார்.
![]()

