புதுடெல்லி,ஜன.21 – நரேந்திரமோடி ஒருபோதும் நாட்டின் பிரதமராக முடியாது என்று காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் நிருபர்களிடம் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் கூறியதாவது:
பாஜக அறிவிக்கும் பிரதமர் வேட்பாளர் எவரும் பிரதமர் ஆனது கிடையாது. அவர்கள் அனைவரும் காத்திருக்க வேண்டியதுதான். இதற்கு முன்பு பிரதமர் வேட்பாளராக அத்வானியை பாஜக அறிவித்தது. அவரால் பிரதமராக முடியவில்லை. அவர் இன்னும் பிரதமராவதற்குக் காத்திருக்கிறார். டெல்லி முதல்வர் பதவி வேட்பாளர்களாக ஹர்ஷ வரத்தன், விஜய் மல்ஹோத்ராவை பாஜக அறிவித்தது. அவர்களும் முதல்வராக வருவதற்குக் காத்திருக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி இதுவரை எவரையும், பிரதமர் மற்றும் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது கிடையாது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் பிரதமராகவும், முதல்வராகவும் ஆகி விடுகின்றனர்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் 100 புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என்று மோடி கூறியுள்ளார். இதிலிருந்து உண்மை நிலவரம் என்னவென்று தெரியாமல் அவர் பேசி வருவது தெரிய வருகிறது. காங்கிரஸ் கட்சி கூட்டணி காலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 2234 நகரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று மக்கன் கூறினார்.
இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் தியாகி நிருபர்க ளிடம் கூறியதாவது:
மோடி விஷம் கலந்த தேநீர் விற்பனையாளர். குஜராத்தில் ஏற்கெனவே விஷத் தேநீரை விற்றுள்ள மோடி பிரதமராக வரக்கூடாது என்று தெரிவித்தார்.
![]()

