தில்லியில் ஆட்சிக்கு வந்த பிறகும், “ஆம் ஆத்மி’ கட்சி வீதியில் இறங்கிப் போராடுவதைப் பார்க்கும்போது, அக் கட்சிக்காக வாக்களித்தவர்களை நினைத்து வருந்துகிறேன் என்று சமூக ஆர்வலரும் முன்னாள் ஐபிஎஸ் பெண் அதிகாரியுமான கிரண் பேடி கூறினார்.
ஆம் ஆத்மி தர்னா குறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏன்தான் வாக்களித்தோம் என்று வாக்காளர்கள் கவலை கொள்ளும் வகையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் செயல்பாடு அமைந்துள்ளது. பிரதேச முதல்வரான பிறகும் அவரால் வீதிக்கு வந்து போராடித்தான் கோரிக்கையை வலியுறுத்த முடிகிறது. இதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. தில்லி வாக்காளர்களை நினைத்து வருத்தப்பட மட்டுமே முடிகிறது. முதல்வருக்கான தகுதி, மரியாதை, மதிப்பு ஆகியவற்றைப் பற்றி எல்லாம் அரவிந்த் கேஜரிவால் உணர்ந்துள்ளாரா? என்ற கேள்வியும் எனக்கு எழுகிறது. அவரது நோக்கம் சரியாக இருந்தாலும் அவருடைய பாதை மிகவும் ஆபத்தானது. முதல்வருக்குரிய பொறுப்புடன் கேஜரிவால் நடந்து கொள்ள வேண்டும் என நானும் தில்லி வாக்காளர்களும் எதிர்பார்க்கிறோம்’ என்றார் கிரண் பேடி.
இதேபோல் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சித் தலைவர்களும் ஆம் ஆத்மியின் தர்னாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
![]()

