புதுடில்லி: நாட்டையே உலுக்கிய, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று காலை, 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.

காங்., தலைமையிலான, முந்தைய ஐ.மு., கூட்டணி அரசில், தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில், 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அலுவலக அறிக்கை தெரிவித்தது.

இது தொடர்பாக, சி.பி.ஐ., இரு வழக்குகளையும், அமலாக்கத் துறை ஒரு வழக்கையும் தொடர்ந்தன. இதில், ஊழல் தொடர்பாக ஒரு வழக்கையும், தி.மு.க.,வுக்கு சொந்தமான, கலைஞர், ‘டிவி’க்கு, 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக ஒரு வழக்கையும், சி.பி.ஐ., தொடர்ந்தது.

கடந்த, 10 ஆண்டுகளாக இந்த வழக்குகளை விசாரித்த டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி, இன்று தீர்ப்பு அளிப்பதாக அறிவித்திருந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய, ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழி உள்ளிட்டோர் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு வெளியாவதால், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading