Ajinkya Rahane

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயலஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக, அஜிங்கியா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமிராவில் பதிவானது. இதையடுத்து பேட்டி அளித்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதற்காக திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தினோம் என்று ஒப்புக்கொண்டார்.

இதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவி ஸ்டீவ் ஸ்மித்திடம் இருந்தும், துணைக் கேப்டன் பதவி டேவிட் வார்னரிடம் இருந்தும் பறிக்கப்பட்டது. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தார்மீக ரீதியான நம்பிக்கையை இழந்ததால், படுதோல்வி அடைந்தது.

ஸ்மித்துக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும், 100 சதவீதம் அபராதமும் விதித்து ஐசிசி உத்தரவிட்டது. மேலும், பான்கிராப்டுக்கு 75 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டித் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித் அதில் தொடர்வாரா அல்லது நீக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதற்கு தெளிவாக பதில் சொல்லாமல், ராஜஸ்தான் ராயலஸ் அணி நிர்வாகம் இருந்தது.

இதற்கிடையே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இன்று அறிவித்தார். இதையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இந்திய வீரர் ரஹானே நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது.

ராஜஸ்தான் அணிக்கு அதிக விலைக்குத் தேர்வான வீரர்கள்

  • ஸ்டீவ் ஸ்மித் – ரூ. 12.50 கோடி
  • பென் ஸ்டோக்ஸ் – ரூ. 12.50 கோடி
  • உனாட்கட் – ரூ. 11.50 கோடி
  • சஞ்சு சாம்சன் – ரூ. 8 கோடி
  • ஜோஃப்ரா ஆர்ச்சர் – ரூ. 7.20 கோடி
  • கெளதம் – ரூ. 6.20 கோடி
  • ரஹானே, ஷார்ட், பட்லர் – ரூ. 4 கோடி
  • ராகுல் திரிபாதி – ரூ. 3.40 கோடி

Loading