பாம்பன் ரெயில் பால நூற்றாண்டு விழா

abdul-kalam

பாம்பன் ரெயில் பால நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க வலியுறுத்துவேன் என்று கூறினார்.

பாம்பன் ரெயில் பாலத்தின் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கார் மூலம் மண்டபம் வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் நந்தகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் மலர்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து மண்டபத்தில் இருந்து தனி ரெயில் மூலம் பாம்பன் ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்தார். ரெயில்வே பொது மேலாளர் ராஜேஷ்மிஸ்ரா அவரை வரவேற்று அழைத்து சென்றார்.

நிகழ்ச்சிக்கு பாம்பன் ஊராட்சி தலைவர் பேட்ரிக் முன்னிலை வகித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஜே.கே.ரித்திஷ், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், விஞ்ஞானி ராஜன் ஆகியோர் பேசினர். பின்னர் விழாவை தொடங்கி வைத்து டாக்டர் அப்துல் கலாம் பேசியதாவது:–

பாம்பன் என்னுடைய வாழ்வில் ஓர் அங்கம். இங்கு சுற்றத்தார்கள் வாழ்ந்தார்கள். இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள். ராமேசுவரம் எனது சொந்த ஊர், உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நூற்றாண்டு விழா காணும் இந்த பாம்பன் பாலத்தில் இன்று பயணம் செய்தேன். பூமி சூரியனை சுற்றி வருவதற்கு ஓராண்டாகிறது. இந்த பாலம் கட்டப்பட்ட பிறகு 100 முறை சுற்றி வந்துள்ளது. இந்திய ரெயில்வே நூறாண்டு காலம் இந்த பாலத்தை பாதுகாத்து மேம்படுத்தி உள்ளது.

ராமேசுவரம் தீவை இந்தியாவுடன் இணைப்பது இந்த பாலம். நான் இன்று ரெயிலில் வந்தபோது மேலே வானம், கீழே கடல். இந்த காட்சி என்னை பரவசப்படுத்தியது. பாலத்திற்குள் ரெயில் நுழைந்து வந்தபோது தென்றல் காற்று வீசி ரீங்காரமிட்டது என் மனதை கவர்ந்துள்ளது.

மனித மனங்களை இணைப்பது போல பாம்பன் பாலம் இந்தியாவையும், இந்த தீவையும் இணைத்து நூறாண்டாகிறது. இப்பாலம் கட்டிய பின்பு இங்கிருந்து தனுஷ்கோடி சென்று அங்கிருந்து இலங்கைக்கு செல்ல வழியாக அமைந்தது. பாலம் தொழில்நுட்பத்தோடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களை, மதங்களை, மனிதத்தை இணைப்பது போல இந்த தீவை இணைத்தது கோடிக்கணக்கான மக்களின் மனதை நெகிழச்செய்துள்ளது. இது இன்னும் பல கோடி ஆண்டு நீடித்து நிலைக்க வேண்டும். இந்தியாவில் கடல் மீது போடப்பட்ட பாலம் இதுதான்.

1914ல் இப்பாலம் போடப்பட்ட பின்னர் தான் வர்த்தகம், சுற்றுலா மேம்பட்டுள்ளது. எனது தகப்பனாரும் இந்த பாலத்தில் பயணம் செய்துள்ளார். 97 வயதான என் அண்ணனும் இதில் பயணம் செய்துள்ளார். நானும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் போது இந்த பாலத்தில் பலமுறை பயணித்துள்ளேன்.

உலகிலேயே துருப்பிடிப்பதில் 2ம் இடம் வகிக்கும் இந்த பகுதியில் அமைந்துள்ள இப்பாலத்தை நல்ல முறையில் பராமரித்து வருவதற்கு தென்னக ரெயில்வேக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உறக்கத்தில் வருவதில்லை கனவு, உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு. கனவாக இருந்தது நனவாக நடந்து வருகிறது. ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரெயில் இயக்கவும், அதற்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டவும் வலியுறுத்துவேன். இது கண்டிப்பாக நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 

By True Tamil

ஜனவரி 29, 2014
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு