நான், கருணாநிதியை சந்தித்ததால், தி.மு.க.,வில் சேர்ந்தேன் என்று சொல்வது தவறு. உறுப்பினர் அட்டையை புதுப்பித்தால் தான், நான், தி.மு.க.,வில், சேர்ந்ததாக அர்த்தம்,” என, டி.ராஜேந்தர் கூறினார். மகள் இலக்கியா திருமணம் குறித்து, ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க, சென்னை தி.நகரில் உள்ள, தன் வீட்டில், நேற்று நிருபர்களைச் சந்தித்த, நடிகர், டி.ராஜேந்தர் கூறியதாவது:என் மகள் இலக்கியாவிற்கும், அவினாஷ் என்பவருக்கும், பிப்., 10ம் தேதி, சென்னை எம்.ஆர்.சி., நகரில் உள்ள ஓட்டலில் திருமணம் நடக்கிறது. அன்று மாலை, திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.நான் கருணாநிதியை சந்தித்ததை, ‘வாசமில்லா மலர் இது; வசந்தத்தை தேடுது’ என, பத்திரிகையில் எழுதியிருந்தனர்.
கருணாநிதி, ஐந்து முறை முதல்வராக இருந்தவர். அவர், என்னை அழைத்து பேசியது பெருமையாக உள்ளது.தி.மு.க., உறுப்பினர் அட்டை வாங்கினால் தான், நான், தி.மு.க.,வில் சேர்ந்ததாக அர்த்தம். கருணாநிதியை சந்தித்தது ஒரு காட்சி; அதன்பின் நடப்பதற்கு பல காட்சிகள் உள்ளன. எல்லா காட்சிகளையும் இப்போதே சொல்லிவிட முடியாது.நான், லட்சிய தி.மு.க.,வை துவங்கிய பின், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல்களில் தீவிர பிரசாரம் செய்தேன். அடுத்து வந்த தேர்தலில், ‘சீட்’ கேட்டேன். நான் தேர்தலில் ஜெயிக்கிறேனோ, இல்லையோ, தலைவர்கள் கூப்பிட்டு பேசும் அளவிற்கு தகுதி உடையவனாக இருக்கிறேன். இது, எனக்கு பெருமை தான். பாரதிய ஜனதாவில் சேர அழைத்தனர்; நான் மறுத்துவிட்டேன்.இவ்வாறு, டி.ராஜேந்தர் கூறினார்.
![]()

