karunanidhi

சென்னை கோபாலபுரம் வீட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி சந்தித்தபோது என்ன பேசினார்? என்பதை கருணாநிதி வேதனையோடு உருக்கமாக தெரிவித்தார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:–

மதுரையில் மு.க.அழகிரி அளித்துள்ள பேட்டி பற்றி?

பொதுவாக தி.மு.க.வை பொறுத்தவரையில், கழகத்தலைவர் அல்லது பொதுச்செயலாளர் அல்லது பொருளாளர் ஆகியோர் மூலமாகத்தான் செயற்குழு, பொதுக்குழுவில் எடுக்கப்படுகின்ற முடிவுகளைப்பற்றி அறிவிப்பது வழக்கம். ஆனால் அதற்கு மாறாக செயற்குழு, பொதுக்குழு முடிவுகளை அலட்சியம் செய்தோ அல்லது விமர்சித்தோ அல்லது கட்டுப்படாமலோ கட்சியிலே உள்ள யாரும், முக்கியமாக பொறுப்பிலே உள்ளவர்கள் நடந்து கொள்வதில்லை.

ஆனால் கடந்த சில மாதங்களாக மு.க.அழகிரி தான் கட்சி உறுப்பினர் என்பதை மறந்துவிட்டு, இன்னும் சொல்லப்போனால் தி.மு.க. தென்மண்டல அமைப்பு செயலாளர் என்ற பொறுப்பிலே இருப்பவர் என்பதையும் மறந்து விட்டு, பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்து, அது தவறான அரசியல் விளைவுகளுக்கு வழி காட்டுவதாக அமைந்து வருவதை நீங்களே உணர்வீர்கள்.

அண்மையில் அவர் அளித்த தொலைக்காட்சி பேட்டியை கண்டும், கேட்டும் இருக்கிறீர்கள். அவருக்கு தி.மு.க.வின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

அதற்கெல்லாம் உச்சகட்டமாக கடந்த 24–ந்தேதியன்று விடியற் காலை என்னுடைய வீட்டிற்குள்ளே அவர் நுழைந்து, படுக்கையில் இருந்த என்னிடம் ஸ்டாலினைப்பற்றி புகார் கூறி, விரும்பத்தகாத, வெறுக்கத்தக்க வார்த்தைகளை எல்லாம் மளமளவென்று பேசி என்னைக் கொதிப்படைய வைத்தார்.

நினைத்தாலே என் நெஞ்சு வெடிக்கக்கூடியதும், இதயம் நின்றுவிடக்கூடியதுமான ஒரு சொல்லையும் அவர் சொன்னார்.

அதாவது ஸ்டாலின் இன்னும் 3, 4 மாதங்களுக்குள் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடத்திலே சொன்னார்.

எந்த தகப்பனாராவது இதுபோன்ற வார்த்தைகளை தாங்கிக்கொள்ள முடியும் என்று யாரும் கருத முடியாது. நான் கட்சி தலைவனாக இருக்கிறவன் என்ற முறையில் அதை தாங்கிக்கொண்டேன்.

நியாயம் கேட்டதாக இப்போது சொல்கிறார். விடியற்காலை 6 அல்லது 7 மணிக்கா கட்சித்தலைவரிடம் நியாயம் கேட்க வருவது என்பதை நீங்கள் தான் நினைத்துப்பார்க்க வேண்டும். அவர் வெளியிலே வந்து சொல்கிற குற்றச்சாட்டு கட்சியிலே சில பேர் மீது, குறிப்பாக அவருக்கு வேண்டிய நண்பர்கள் மீது நடவடிக்கை எடுத்தது தவறு என்ற குற்றச்சாட்டாகும்.

கட்சியிலே உள்ள மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளர் மூர்த்தி மீது பி.சி.ஆர். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போலீசாருக்கு எழுதிக்கொடுத்தவரை, கட்சித்தலைவர் என்ற முறையில் நான் விசாரிப்பதும், கண்டிப்பதும் எப்படி குற்றமாகும் என்பதையும் உங்கள் யோசனைக்கே விட்டுவிடுகிறேன்.

அவர் மீது கட்சியின் சட்டதிட்டபடி பொதுச்செயலாளர் கண்டனமும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். அது கட்சியின் சட்டதிட்டப்படி செய்யப்பட்ட ஒன்றாகும்.

அதற்கு நேரிலோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ விளக்கமளித்து பிரச்சினையை அணுக வேண்டுமே தவிர தனக்கு வேண்டிய பழைய நண்பர் கூட்டத்தை வைத்துக்கொண்டு சுவரொட்டிகளை ஒட்டுவதும், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதும் எப்படி முறையாகும்?.

என் மகன்கள் ஸ்டாலின் ஆனாலும், அழகிரி ஆனாலும் மகன்கள் என்ற உறவு நிலையிலே அல்ல; கட்சி உறுப்பினர்கள் என்ற முறையிலே கூட அவர்களில் ஒருவர் 4 மாதங்களில் செத்துவிடுவார் என்று கட்சித்தலைவனாகிய எனக்கு முன்னாலேயே உரத்த குரலில், ஆரூடம் கணிப்பது யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

இந்த இயக்கம் அண்ணா காலத்தில் இருந்து இதுவரையில் எத்தனையோ இதுபோன்ற சோதனைகளை எல்லாம் சந்தித்து விட்டு, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இயக்கமாகும்.

தமிழ் மக்கள் வளத்தோடும், வலிமையோடும் வாழ வேண்டுமென்பதற்காக என்னுடைய 14–வது வயது முதல் இந்த 91–வது வயது வரையில் பல தியாகங்களை செய்து அடக்கு முறைகளை ஏற்று, பெரியாரும், அண்ணாவும் உருவாக்கித் தந்த இந்த இயக்கத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறவன் என்ற முறையில் இந்த உண்மை நிலவரத்தை தமிழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்பதற்காகவே பத்திரிகையாளர்களாகிய உங்கள் மூலமாக இந்த செய்திகளை எல்லாம் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் மன்னிப்பு கோரினால் தற்காலிக நடவடிக்கை ரத்து செய்யப்படுமா?

இந்த கேள்வியை நீங்கள் அவரைப்பார்த்து கேட்கவேண்டும்.

அவர் ஏதோ முறைகேடுகள் நடந்ததைப்பற்றி குறிப்பிட்டு அதை கேட்பதற்காக தான் உங்களை சந்தித்ததாக சொல்கிறாரே?.

எந்த முறைகேடு பற்றியும் எனக்கு தெரியாது.

காங்கிரஸ் கட்சி உங்களிடம் கூட்டணி வைக்க முன்வந்தால் உங்கள் கருத்து என்ன?

காங்கிரஸ் கட்சி எங்களைத்தேடி வருவதாக நான் ஜம்பம் அடித்துக்கொள்ள விரும்பவில்லை. ஒருவரையொருவர் அரவணைத்து அணி சேருவது அந்தந்த கட்சிகளுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் நடைபெற வேண்டிய விஷயங்களாகும்.

தே.மு.தி.க.வோடு தி.மு.க. கூட்டணி சேருவது பற்றி?

நாங்கள் முதலிலே அதைப்பற்றி சொல்லி விட்டோம். அதற்கு மேல் தொடர வேண்டியவர்கள் அவர்களே தவிர நாங்கள் அல்ல.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

Loading