புதுடெல்லி : கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், பிரபல விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் ஆகியோருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்த சச்சின் தெண்டுல்கர், கடந்த நவம்பர் மாதம் 16–ந்தேதி ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் 40 வயது தெண்டுல்கருக்கு, மும்பையில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற 200–வது டெஸ்ட் போட்டி முடிவடைந்ததும் பிரியாவிடை கொடுக்கப்பட்டது.
அவர் ஓய்வு பெற்ற நாளிலேயே, தெண்டுல்கருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. விளையாட்டுத் துறையில் பாரத ரத்னா விருதைப் பெறும் முதல் வீரர் தெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடன் பிரபல விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கும் (வயது 79) பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. டெல்லி ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற வண்ணமிகு விழாவில், தெண்டுல்கர், சி.என்.ஆர்.ராவ் ஆகியோருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவித்தார்.
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், அவருடைய மனைவி குருசரண் கவுர், மத்திய மந்திரிகள், தெண்டுல்கரின் மனைவி அஞ்சலி, மகள் சாரா மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் இந்த விழாவில் பங்கேற்று விருது பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
கடந்த 1955–ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருது, பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை புரிந்த 41 பேருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது. அந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ள தெண்டுல்கர் மற்றும் சி.என்.ஆர்.ராவ் ஆகிய இருவருமே ஏற்கனவே நாட்டின் இரண்டாவது பெரிய விருதான பத்மவிபூஷண் விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் விளையாட்டு உலகில் இந்தியாவின் உண்மையான தூதுவராக விளங்கிய தெண்டுல்கரின் சாதனை ஈடு இணையற்றது, யாருடனும் ஒப்பிட முடியாதது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
தாய்மார்களுக்கு அர்ப்பணிப்பு சச்சின் உருக்கம்
பாரதா ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோது இந்த விருதை தனது தாயாருக்கு சமர்ப்பணம் செய்வதாக தெண்டுல்கர் அறிவித்து இருந்தார். விருது வழங்கப்பட்டதும் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது, இந்த கருத்தை மீண்டும் நினைவுபடுத்திய தெண்டுல்கர், தனது தாயாருடன் நாட்டில் உள்ள மற்ற தாய்மார்களுக்காகவும் பாரத ரத்னா விருதை அர்ப்பணிப்பதாக குறிப்பிட்டார்.
‘‘எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தாலும், இந்தியாவின் சாமானிய மக்களின் முகங்களில் புன்னகை தவழ்வதற்காக எனது வாழ்நாளை அர்ப்பணித்துக்கொள்வேன்’’ என்று உறுதி அளித்த தெண்டுல்கர், ‘‘இந்த விருது எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கவுரவம் ஆகும். இதனால் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளேன்’’ என்றும் தெரிவித்தார்.
விருது பெற்ற மற்றொருவரான சி.என்.ஆர்.ராவ், இளைஞர்கள் விஞ்ஞானிகளாக வருவதற்கு தூண்டுகோலாக விளங்குவதாகவும், அவர் பாராட்டு தெரிவித்தார்.
சி.என்.ஆர்.ராவ் மகிழ்ச்சி
பாரத ரத்னா விருது பெற்ற சி.என்.ஆர்.ராவ் என்று அழைக்கப்படும் பேராசிரியர் சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ், சர்வதேச அளவில் புகழ்பெற்ற வேதியியல் துறை விஞ்ஞானி ஆவார். 1400 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ள அவர், 45 புத்தகங்களை எழுதி இருக்கிறார். சர் சி.வி.ராமன், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோரை அடுத்து இந்த விருதைப் பெற்றுள்ள 3–வது விஞ்ஞானி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிரதமரின் அறிவியல் ஆலோசனை குழுவின் தலைவராக தற்போது பதவி வகித்து வரும் சி.என்.ஆர்.ராவ், விருது பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் கூறியதாவது–
14 விஞ்ஞானிகளுக்கு பத்ம விருது
‘‘சர்வதேச அளவில் எத்தனையோ விருதுகளை பெற்றாலும் எனது சொந்த நாடான இந்தியா என்னை கவுரவிப்பதை மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். நான் தற்போது 80 வயதை நெருங்கிவிட்டேன். வருகிற நாட்களில் மேலும் முக்கியமானவைகளை என்னால் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.
அறிவியல் துறையில் நமது நாடு சிறப்பாக பணியாற்றி வருகிறது. அதே நேரத்தில் மற்ற நாடுகள் மேலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தென் கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஆய்வுப்பணிகளுக்காக அதிகம் செலவிட்டு வருகின்றன. சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட பத்ம விருது பட்டியலில் 14 விஞ்ஞானிகள் இடம்பெற்று இருப்பது நல்ல அறிகுறி’’.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()

