ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தது. எனினும் அந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இதையடுத்து சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார். அதுபோல் ஆந்திர அரசில் அங்கம் வகித்திருந்த பாஜகவினரும் மாநில அமைச்சரவையில் இருந்து விலகினர். இந்த நிலையில் பல்வேறு சமாதானப் பேச்சுக்கள் நடத்தப்பட்டாலும் நாயுடு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி அம்மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஏப்ரல் 20-ந்தேதி அன்று தெலுங்கு தேசம் சார்பில் 12 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து இருந்தார்.

அதன்படி நேற்று காலை அவர் விஜயவாடா நகரில் உள்ள ஐ.ஜி.எம். மைதானத்தில் காலை 7 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை கருப்பு பட்டை அணிந்து தொடங்கினார். முன்னதாக அவர் மகாத்மா காந்தி, தெலுங்குதேசம் நிறுவனர் என்.டி.ராமராவ், சட்ட மேதை அம்பேத்கர், சுதந்திர போராட்ட வீரர் பொட்டி ஸ்ரீராமுலு ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். இதேபோல் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மத குருமார்களிடம் ஆசியும் பெற்றார். சந்திரபாபு நாயுடுவுக்கு நேற்று 69-வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், மாநில நலனை மத்திய அரசுக்காக எப்போதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. தமிழகத்தை போல ஆந்திரத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறது. அதை எப்போதும் நடத்த விடமாட்டேன். மத்திய அரசுடனான இந்த போராட்டம் என் சுயநலம் அல்ல, மாநில நலத்துக்கானது என்றார் சந்திரபாபு நாயுடு.

#ChandrababuNaidu #AndhraPradesh #TamilNadu #APDemandsJustice #APDemandsSpecialStatus

Loading