
▶
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சி குழுவினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அந்த பகுதிகளை மீட்கவும், போராளிகளின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்குமிடங்களை அழிக்கவும் ரஷிய நாட்டு படைகளின் துணையுடன் சிரியா ராணுவம் ஆவேச தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள சிரியாவில் காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை ஒரு மாதத்துக்கு இடைக்கால போர்நிறுத்தம் செய்யும் சமரசத்தை ரஷியா உருவாக்கி தந்தது. இந்த போர்நிறுத்த நேரம் தவிர மற்ற வேளைகளில் இருதரப்பினரும் சரமாரியான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கிழக்கு கவுட்டா பகுதியில் போராளிகளின் பிடியில் உள்ள பகுதிகளை மீட்பதற்காக கடந்த இருநாட்களாக அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதன் விளைவாக சில நகரங்களையும், விவசாயப் பண்ணை நிலங்களையும் கைப்பற்றியுள்ளதாக சிரியா ராணுவம் நேற்று அறிவித்தது.
இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களது தலைமையகங்கள் மற்றும் ரகசிய குகைகள் போன்றவை அழிக்கப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 34 பேர் உயிரிழந்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருந்தது.
இதைதொடர்ந்து, நேற்று பின்னிரவில் இருந்து இன்று அதிகாலை வரை ஹுமேரிய்யே உள்ளிட்ட பகுதிகளில் அரசு விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் மேலும் 14 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு கூட்டாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதிகளில் சிரிய அரசு நடத்தி வரும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் கொடூரமானது என்று தெரிவித்துள்ள அமெரிக்கா, அதிபர் பஷார் அல் அசாத்தின் முக்கிய கூட்டாளியான ரஷியா, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எனக்கூறி அப்பாவி பொதுமக்களை கொல்வதாக தெரிவித்துள்ளது.
ஐ.நா.,வின் போர் நிறுத்த தீர்மானத்திற்கு பிறகும் ரஷிய போர் விமானங்கள் கிழக்கு கூட்டாவில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
கிளர்ச்சியாளர்களின் பகுதியில் தனது அரசு படைகள் முன்னேறிச் செல்வதால் தாக்குதல் தொடரும் என அதிபர் பஷார் அல்-அசாத் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான போர் நிறுத்தம் என மேற்கத்திய நாடுகள் கூறுவது அபத்தமான பொய் எனவும் அசாத் தெரிவித்துள்ளார்.
ஞாயிறன்று குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், அரசப்படைகள் கால்வாசி பகுதியை அடைந்துவிட்டதாகவும் கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
கிழக்கு கூட்டாவில், திங்களன்று உதவி பொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதி தங்களிடம் உள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.
![]()

