மார்ச் 13, 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 16-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை இந்தியா, வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் மூன்று கட்டமாக நடைபெற இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை இந்த முறை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் உருவானது. ஐ.பி.எல். போட்டி சமயத்தில் பாராளுமன்ற தேர்தல் (9 கட்டமாக ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 12-ந்தேதி வரை) நடைபெற இருப்பதால், அந்த காலக்கட்டத்தில் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
இதனால் ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு மாற்றலாமா? அல்லது ஒரு பகுதி போட்டியை மட்டும் அன்னிய நாட்டில் நடத்தலாமா? என்பது குறித்து ஐ.பி.எல். நிர்வாகிகளும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் கடந்த சில தினங்களாக தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டனர். மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுடனும் அவ்வப்போது ஆலோசனைகளை பெற்றனர்.
ஆனால், கணிசமான போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும், இல்லாவிட்டால் தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்று அணி நிர்வாகிகள், இந்திய கிரிக்கெட் வாரியத்தை வற்புறுத்தினர்.
இந்த நிலையில் 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா எங்கு நடைபெறும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
7-வது ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 16-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இதில் தொடக்க கட்ட போட்டிகள் ஏப்ரல் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் (அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய மைதானங்களில்) நடைபெறும். குறைந்தது இங்கு 16 ஆட்டங்கள் நடைபெறும். இந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த முன்வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும் அதன் அரசுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் நன்றி கடன்பட்டுள்ளது.
இதன் பின்னர் இந்தியாவில், தேர்தல் முடிவடைந்த நகரங்களில் மே 1-ந்தேதி முதல் மே 12-ந்தேதி வரை ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுள்ளது. இதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது என்பதை அறிவோம். ஆனாலும் எங்களுக்கு சாதகமாக பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறோம். மத்திய உள்துறை அமைச்சகம் எந்த முடிவு எடுத்தாலும் அதை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ளும்.
ஒருவேளை இந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் ஐ.பி.எல். போட்டியை நடத்த வாய்ப்பில்லை என்றால் அந்த போட்டிகள் (மே 1-ந்தேதி முதல் மே 12-ந்தேதி வரை) வங்காளதேசத்திற்கு மாற்றப்படும். எங்களுக்கு ஆதரவுகரம் நீட்டியுள்ள வங்காளதேச கிரிக்கெட் வாரியத்திற்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இதைத் தொடர்ந்து ஐ.பி.எல். எஞ்சிய லீக் போட்டிகள் மற்றும் பிளேஆப், இறுதிப்போட்டிகள் அனைத்தும் மே 13-ந்தேதியில் இருந்து (அதாவது அனைத்து மாநிலங்களிலும் பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற்ற பிறகு) ஜூன் 1-ந்தேதி வரை இந்தியாவில் நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை நாளான மே 16-ந்தேதி மட்டும் போட்டிகள் நடக்காது. போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக புனே வாரியர்ஸ் அணி நீக்கப்பட்டு விட்டதால், இந்த முறை அணிகளின் எண்ணிக்கை 8 ஆக குறைந்துள்ளது. இதன்படி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் களம் இறங்குகின்றன.
ஒரு அணி கழற்றிவிடப்பட்டிருப்பதால் ஆட்டங்களின் எண்ணிக்கை 76-ல் இருந்து 60 ஆக சரிகிறது. இதே போல் கடந்த சீசனில் போட்டிகள் 54 நாட்கள் நடந்தது. ஆனால் இந்த முறை 47 நாட்கள் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘வெளிநாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்டங்களையும், இந்திய மண்ணில் அதிகமான போட்டிகளையும் நடத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இங்கு 30 நாட்களில் குறைந்தது 40 ஆட்டங்களை நடத்த விரும்புகிறோம். இப்போதைக்கு 2 வார கால ஆட்டம் மட்டுமே வெளிநாட்டுக்கு செல்கிறது. அதற்கு ஏற்ப அட்டவணை தயாரிக்கப்படும். மாற்று இடம் என்று வந்தால் தென்ஆப்பிரிக்காவுக்கு தான் முன்னுரிமை அளிப்போம் என்று ஐ.பி.எல். தலைவர் ரஞ்சிப் பிஸ்வால் கூறியிருந்தது பற்றி கேட்கிறீர்கள். 15 நாட்கள் மட்டுமே தென்ஆப்பிரிக்காவில் போட்டியை நடத்துவது என்பது சாத்தியமில்லை. ஏனெனில் அங்கு செல்லும் போது, பயணக்களைப்பு மற்றும் சில நடைமுறைகள் காரணமாக குறைந்தது 3 நாட்கள் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டி வரும். எனவே தான் அதைவிட இந்த போட்டிக்கு பொருத்தமான மாற்று இடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வங்காளதேசம் இருக்கும் என்று கருதி அவற்றை தேர்வு செய்துள்ளோம்’ என்றார்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. 1980 மற்றும் 1990-களில் இந்திய அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் விளையாடிய ஆட்டங்கள் மிகவும் பிரபலமானவை. ஆனால் 2000-ம் ஆண்டு சூதாட்ட புயல் கிளம்பிய போது, அங்கு தனிப்பட்ட ஆட்டங்களில் விளையாடுவதை இந்தியா பொதுவாக தவிர்த்துக் கொண்டது.
![]()

