புதுடெல்லி: தாம் முதல்வரானால்தான் தமிழக பிரச்னைகள் தீருமோ என்று பிரதமர் தம்மிடம் கூறியதாக விஜயகாந்த் பெருமிதத்துடன் கூறினார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் இன்று சந்தித்து பேசினார்.
அதன்பின் நிருபர்களிடம் விஜயகாந்த் பேசும்போது, “தமிழக மக்களை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வஞ்சிக்கின்றன. பிரதமரை சந்தித்து மீனவர்கள் பிரச்னை, தண்ணீர் பிரச்னை, மின்சார பிரச்னை குறித்தும், பேசினேன். அவர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார்.
மேலும், தமிழக பிரச்னைகள் தொடர்பாக என்னை முதல்வர் ஜெயலலிதா சந்திக்கவில்லை என்று அவர் கூறினார். நீங்களாவது தமிழக பிரச்னை பற்றி என்னை சந்தித்து பேச வந்துள்ளீர்கள். ஒருவேளை நீங்கள் முதல்வரானால் இந்த பிரச்னைகள் தீருமோ என்று கூறினார். அவர் அப்படி கூறியது எனக்கு சந்தோஷமாக இருந்தது “என்றார்.
தொடர்ந்து கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் விஜயகாந்த். முன்னதாக நேற்று டெல்லி புறப்படும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணி தொடர்பாக டெல்லியில் வைத்து தெரிவிப்பேன் என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே உளுந்தூர் பேட்டை மாநாட்டில் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பேன் என்று கூறிவிட்டு, பின்னர் அதுபற்றி எதுவும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
![]()

