மார்ச்.11, இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும். தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கு எடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் மத்திய அரசு முன் மொழிய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் கார்த்திக், அருண்குமார், ஜெயபிரகாஷ், சிவராஜ், யுவராஜ் ஆகிய 5 பேர்கள் தஞ்சை முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.
இந்நிலையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் மாணவர்களின் உடல் நிலை மற்றும் தேர்வை கருத்தில் கொண்டும், அனைத்து கட்சி நிர்வாகிகளின் கோரிக்கைகளை ஏற்றும் மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை பழச்சாறு கொடுத்து இன்று முடித்து வைத்தார்.
இது குறித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அனைத்து கட்சி தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணைங்க இன்று மாணவர்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து உள்ளனர்.
ஆனால் இவர்களின் போராட்ட வடிவமைப்பு வேறு வழிகளில் தொடந்து நடைபெறும். மாணவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22–ந் தேதி தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரம் இருக்க உள்ளனர். இதற்கு அனைத்து கட்சியினர்களும் ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த பிரச்சினையில் அனைத்து கட்சியினர்களுக்கும் ஒரே நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிப்பது தொடர்பான கூட்டம் இங்கு நடைபெற்றது. இதில் ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, தமிழர் தேசிய இயக்கம் மற்றும் மாணவ கூட்டமைப்பினர்கள் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதம் இருந்த மாணவர் ஜெயபிரகாஷ் கூறும் போது:
மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக இங்கு உண்ணாவிரம் இருந்து வந்தோம். அனைத்து கட்சி தோழர்கள், தமிழ் இன உணர்வாளர்கள் வேண்டுகோளை ஏற்று நாங்கள் உண்ணாவிரதத்தை முடித்து கொள்கிறோம்.
ஆனால் வேறு வழியில் எங்கள் போராட்ட வடிவம் தொடர்ந்து நடைபெறும். வருகிற 22–ந்தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் முன்பு மாணவர்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரம் நடைபெறும்.
இதற்கு மாணவர்களின் ஆதரவு கேட்டு பேசி உள்ளோம். எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு செவிசாய்க்கும் வரை பல்வேறு விதமாக போராட்டம் தொடரும்.
![]()

