karunanidhi

மார்ச் 19, சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏப்ரல் 5–ந்தேதி முதல் ஏப்ரல் 21–ந்தேதி வரை 12 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

ஸ்டாலின் பிரசாரம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 24–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. 35 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதர 5 தொகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சி 2 தொகுதிகளிலும், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகிய கட்சிகள் தலா 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 14–ந் தேதி கன்னியாகுமரியில் தனது சூறாவளி பிரசாரத்தை தொடங்கினார். இவர் 39 நாட்கள் தொடர் பிரசார பயணம் மேற்கொண்டு, ஏப்ரல் 22–ந் தேதி திருச்சியில் தனது பிரசாரத்தை முடிக்க உள்ளார்.

கருணாநிதி பிரசாரம்

இந்தநிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏப்ரல் 5–ந்தேதி முதல் ஏப்ரல் 21–ந்தேதி வரை 12 நாட்கள் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஏப்ரல் 5–ந்தேதி இரவு 7 மணிக்கு கோவையில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அதைத்தொடர்ந்து 6–ந்தேதி மாலை 5 மணிக்கு திருப்பூரிலும், இரவு 8 மணிக்கு ஈரோட்டிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

புதுச்சேரி, திருச்சி

பின்னர், 7–ந்தேதி இரவு 8 மணிக்கு சேலத்திலும், 10–ந்தேதி மாலை 4.30 மணிக்கு மரக்காணத்திலும்(விழுப்புரம்) மாலை 5.30 மணிக்கு புதுச்சேரியிலும், மாலை 6.30 மணிக்கு கடலூரிலும், இரவு 8 மணிக்கு சிதம்பரத்திலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதே போன்று, 11–ந் தேதி மாலை 6 மணிக்கு மயிலாடுதுறையிலும், இரவு 8 மணிக்கு திருவாரூரிலும், 12–ந்தேதி மாலை 6 மணிக்கு தஞ்சாவூரிலும், இரவு 8 மணிக்கு திருச்சியிலும், 13–ந்தேதி மாலை 5 மணிக்கு துவரங்குறிச்சியிலும்(கரூர்), இரவு 7 மணிக்கு மதுரையிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

காஞ்சீபுரம், சென்னை

அதைத்தொடர்ந்து 16–ந்தேதி மாலை 6 மணி ஸ்ரீபெரும்புதூர், இரவு 8 மணிக்கு வேலூரிலும், 17–ந்தேதி இரவு 7 மணிக்கு காஞ்சீபுரத்திலும், 19–ந்தேதி மாலை 6 மணிக்கு திருவள்ளூர் மற்றும் இரவு 8 மணிக்கு வடசென்னையிலும், 20–ந்தேதி மாலை 7 மணிக்கு தென் சென்னையிலும் தனது பிரசாரத்தை மேற்கொள்கிறார். இறுதியாக 21–ந்தேதி மாலை 7 மணிக்கு மத்திய சென்னையில் தனது பிரசாரத்தை முடித்து கொள்கிறார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Loading