தி மு க விற்கு எதிராக அழகிரிக்கு தூதுவிடும் காங்கிரஸ்.

Alagiri meets Rajinikanth, denies discussing politics

மார்ச் 16, தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி முக்கிய பிரமுகர்களை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், அவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேனி எம்.பி. ஆரூண் மதுரையில் நேற்று மாலை சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு அழகிரியின் இல்லத்தில் நடந்தது.

காங்கிரஸ் எம்.பி.யின் சந்திப்புக்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது, “கடந்த 2009-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்னை தேனி தொகுதியில் வெற்றி பெற வைத்ததற்கு நன்றி தெரிவித்தேன் (இவ்வளவு லேட்டாகவா?). பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்தற்கு வாழ்த்து தெரிவித்தேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடுகிறேன். தேர்தலில் ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டேன்” என்றார்.

மத்திய அமைச்சரவையில் 4 ஆண்டுகள் பதவியில் இருந்த அழகிரி, கடந்தவாரம்தான் தம்மை அமைச்சராக்கியதற்கு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றி தெரிவிக்கச் சென்றார். ராஜினாமா கடிதம் கொடுத்த போது நன்றி தெரிவிக்க நேரம் இல்லாததால், மன்மோகன் சிங் டெல்லி செங்கோட்டையிலிருந்து மூட்டை கட்டும் 11-வது மணி நேரத்தில் நேரத்தில் நன்றி தெரிவிக்கச் சென்றார்.

அழகிரியின் இந்த பாணி காங்கிரஸ் எம்.பி. ஆருணுக்கும் ரெம்பப் பிடித்துவிட்டது போலும்!

அதுதான் 5 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்த ஆருண், டெல்லி, சென்னை என பலமுறை அழகிரியைச் சந்தித்தபோதெல்லாம் நன்றி தெரிவிக்காமல் மதுரையில் அவரது வீட்டில் வந்து நன்றி தெரிவிக்கிறார்.

தமிழக காங்கிரஸ்காரர்கள் எத்தனையோ குட்டைகளை உருவாக்கி, அவற்றைக் கலக்கியதோடு மீனையும் பிடித்துள்ளனர். அதைப்போலத்தான் தி.மு.க. குட்டையிலும் மீன்பிடிக்க முயற்சி செய்கின்றனர். இதற்கு பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கும் மூடில் உள்ள அழகிரிதான் கிடைத்தாரா?

கூட்டணி வைக்க கடைசி நேரம் வரை காத்திருந்த காங்கிரஸ் கட்சியை தி.மு.க. கண்டுகொள்ளவில்லை. இதனால், தனி மரமான காங்கிரஸ் கட்சி இதற்குப் பழிவாங்கும் வகையில் மேற்கொள்ளும் உத்திதான் இதுவென்றால், ‘அடப்பாவமே’ என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.

காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜி.கே. மூப்பனார் பிரிந்து சென்று தனிக்கட்சி (த.மா.கா.) தொடங்கி தி.மு.க.வோடு கூட்டணி வைத்ததுபோல, அழகிரி தி.மு.க.விலிருந்து பிரிந்து வந்தாலும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைமை தயாராக உள்ளது.

கடந்த 14-ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தி.மு.க.வையும், அதன் தலைவர் கருணாநிதியையும் நிர்வாகிகள் கடுமையாகத் தாக்கிப் பேசினர். ஆனால் அழகிரி பற்றி யாரும் வாய் திறக்கவில்லை.

தி.மு.க.மீது கடும் ஆத்திரத்தில் இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், இதுதான் சந்தர்ப்பம் என அழகிரியை நாடியுள்ளனர். அழகிரியின் நாடியைப் பிடித்து பார்த்துவரத்தான் காங்கிரஸ் எம்.பி.யை அனுப்பி வைத்ததாக காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் நம்மிடம் கூறினார்.

அழகிரியோ “என்னை வெளியேற்றினாலும் நான் தி.மு.க.வில் (இருந்துகொண்டே ஸ்டாலினுக்கு குடைச்சல் கொடுப்பேனே தவிர) இருப்பேனே தவிர, புதிதாக கட்சி தொடங்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை” என வெளிப்படையாக கூறியுள்ளார். இதனால், உள்ளே குடைச்சல் கொடுத்தபடியே இருந்துகொண்டு, வெளியே தமக்கு ஆதரவு கொடுப்பாரா என பார்த்துவர அனுப்பி வைக்கப்பட்டாராம், ஆரூண்.

அழகிரிக்கு நெருக்கமான மதுரைப் புள்ளி ஒருவரிடம் பேச்சுக் கொடுத்து பார்த்தபோது, “அண்ணன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதா? ஹா.. ஹா..” என்றார்.

“காங்கிரஸ் கட்சிக்கு அண்ணன் ஆதரவு கொடுத்தால் டெபாஸிட்டை வேண்டுமானால் அக்கட்சி தக்க வைக்கலாம். ஆனால், வெற்றிபெற முடியாது. எனவே, வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்கள் அல்லது பாரதிய ஜனதா அணிக்கு அண்ணன் ஆதரவு கொடுப்பார். இருந்தாலும் நாளை அண்ணன் எடுக்கும் முடிவில்தான் எல்லாமே இருக்கிறது” என்றார் அவர்.

தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில், இந்த அழகிரி ஆதரவாளரின் கணிப்பு, நம்மால் நம்ப முடியாத விதத்தில் உள்ளது! “என்னது… அழகிரி ஆதரவு கொடுத்தால், காங்கிரஸ் கட்சியால் டெபாஸிட்டை தக்க வைக்க முடியுமா?”

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு