தமிழ் மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாட உள்ள பொங்கல் விழா ஏற்பாடுகள் தமிழ் மக்கள் வாழும் அனைத்து இடங்களிலும் நடந்துவருகின்றன.
இதில் தமிழுக்கு சங்கம் வளர்த்த மதுரையில் நமது மரபுகளை போற்றும் விழா ஏற்பாடுகள் நடக்க உள்ளன. அவற்றில் ஒன்றான ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்திப் பெற்றது.
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பாலமேடு ஜல்லிக்கட்டு 15ஆம் தேதி புதன்கிழமையும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16ம் தேதியும் நடைபெற உள்ளன.
இதையொட்டி வாடிவாசல் வர்ணம் பூசும் பணியும், பார்வையாளர்கள் மேடை அமைக்கும் பணியும் நடந்து வருகின்றன.
பாலமேட்டில் 600 மாடுகளும், அலங்காநல்லூரில் 650 மாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அலங்காநல்லூரில் மாடுபிடி வீரர்களுக்கான அனுமதி விண்ணப்பங்கள் அங்குள்ள கோட்டை முனியசாமி திடல் முன்பு போலீஸ் பாதுகாப்புடன் வழங்கப்பட்டது.
500 வீரர்களுக்கு மட்டுமே இந்த விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
அலங்காநல்லூரில் காளைகள் அவிழ்த்துவிடும் வாடிவாசலையும், பார்வையாளர்கள் மேடைகள் அமைக்கும் பணியையும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அமர்ந்து பார்க்கும் மேடையையும், சோழவந்தான் சட்டப் பேரவை உறுப்பினர் எம்.வீ.கருப்பையா, பேருராட்சி தலைவர் கீதாபாலாஜி, விழா குழுத்தலைவர் சுந்தரராஜன், கூட்டுறவு வங்கித் தலைவர்கள் அழகுராஜா, சுந்தரராகவன், மற்றும் விழாக் குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஆண்டு தோறும் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டில் வருகிற செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முதல் காளைகள் பதிவு அவனியாபுரம் காவல்நிலையத்தில் நடைபெற்றது. காலை முதல் மதியம் வரை நடைபெற்ற பதிவில் 501 மாடுகளுகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
மாடுபிடி வீரர்கள் பதிவு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. 21 முதல் 40 வயதுக்கு உள்பட்ட வீரர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டனர். வயது சான்றிதழ், போட்டோ, முகவரிச் சான்று ஆகியவற்றை சரிபார்த்தபின்னரே பதிவு செய்தனர். இதுவரை 225 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். சனிக்கிழமையும் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 300 வீரர்களுக்கு மாடுபிடிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. பதிவு செய்த வீரர்களுக்கு திங்கள்கிழமை டோக்கன் வழங்கப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
“இளங் காளையர்களும் காளைகளும் தயார்”
![]()

