தேனி: தேனி மாவட்ட சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளையும் போலீஸார் கைது செய்துள்ளனர். கடைசியாக தலைமறைவாக இருந்த மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் திருப்பதி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்ததைத் தொடர்ந்து, தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது.
சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகள்
தேனி மாவட்ட சிறையில் கடந்த 26-ம் தேதி இரவு போலீஸாரைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக பிரவீன் குமார் என்பவர் சிறைக்கு அருகே பிடிபட்டார். தொடர்ந்து சிலம்பரசன், ராஜாசிக்கந்தர், ராஜ்குமார், பிரசாந்த் என்ற லிங்கபிரசாத் உள்ளிட்ட கைதிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, வனப்பகுதியில் பதுங்கியிருந்த கருப்பசாமி, தருண்குமார், பாண்டிச்செல்வம், சபரிநாதன், நிஷாந்த், முத்து இளங்கோவன், கார்த்திக் ராஜா, சோலை முகிலேஸ்வரன் உள்ளிட்ட கைதிகளையும் போலீஸார் கண்டுபிடித்தனர். ட்ரோன்கள் உதவியுடன் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையும் கைதிகளைப் பிடிக்க உதவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பொன்முத்து, ரெஜின் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனால், 17 பேரில் 15 பேர் போலீஸாரிடம் சிக்கினர்.
பைக்கைப் பறித்துக்கொண்டு தப்பிய சகோதரர்கள்
மீதமிருந்த திருப்பதி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவரும் சகோதரர்கள். போலீஸார் தங்களை நெருங்குவதை அறிந்த அவர்கள், மலைப்பகுதியிலிருந்து வேறு பாதையில் மலையடிவாரத்துக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரைத் தாக்கி, அவரது வாகனத்தைப் பறித்துக்கொண்டு இருவரும் தப்பிச் சென்றதாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து, தேனி மாவட்ட எல்லைகளிலும் க.விலக்கு உள்ளிட்ட முக்கியப் பகுதிகளிலும் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. தனிப்படை போலீஸார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து மேற்கொண்டனர்.
தாயார் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
தலைமறைவாக இருந்த இரு கைதிகளின் தாயார் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், தனது மகன்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்றும், அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், தனது மூத்த மகன் மீனாட்சி சுந்தரத்தின் மனைவி எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், தனது மகன்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
தப்பிய கைதிகளைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த வீடியோ கவனத்தை ஈர்த்தது.
கடைசி இரண்டு கைதிகளும் கைது
இந்நிலையில், திருப்பதி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவரும் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைய வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உத்தமபாளையம் டிஎஸ்பி சந்திரசேகரன் மற்றும் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வரும் வழியிலேயே இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் இருவரும் க.விலக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன் மூலம் தேனி மாவட்ட சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, கைதிகளைப் பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டை நிறைவடைந்துள்ளது.
