மார்ச் 15, 239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சி இன்று (சனிக்கிழமை) 8–வது நாளாக தொடர்கிறது. 12 நாடுகள் விமானங்களையும், கப்பல்களையும், செயற்கைக்கோள்களையும் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தியும் சிறிதும் பலன் இல்லை.
இந்த நிலையில், மாயமான விமானம் கடத்தப்பட்டிருப்பதற்கான வாய்புகள் அதிகம் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டுள்ளதை புலனாய்வாளர்கள் உறுதி செய்துள்ளதாக மலேசிய அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மாயமான விமானத்தில் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி கூறுகையில், விமானம் கடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை; விமானம் எங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை என்று தெரிவித்தார்.
அமெரிக்கா அளித்த தெளிவான தகவல்கள் அடிப்படையில்தான். அந்தத் தகவலின்படி, கோலாலம்பூரிலிருந்து கிளம்பிய விமானத்தின் டிரான்ஸ்பான்டரை யாரோ வேண்டுமென்றே துண்டித்திருக்கிறார்கள். ரிபோர்டிங் சிஸ்டம் மற்றும் ட்ரான்ஸ்பாண்டர் இரண்டையும் அதிகாலை 1:07 மற்றும் 1:21-க்கு தனித்தனியாகத் துண்டித்துள்ளனர். விமானம் விபத்துக்குள்ளாகியிருந்தால் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது 12 நிமிடங்கள் வித்தியாசத்தில் இந்த இரு தகவல் தொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த வேலையை ஒரு தொழில்முறை கடத்தல்காரனால் கூட செய்ய முடியாதாம். விமானி அல்லது விமானத் தொழில்நுட்பம் அத்துப்படியாகத் தெரிந்த ஒருவர்தான் இப்படிச் செய்ய முடியும். ஏற்கெனவே இருமுறை கடந்த காலங்களில் இப்படி நடந்திருப்பதாக சர்வதேச விமானிகள் அமைப்பின் உறுப்பினர் மைக் க்ளைன் தெரிவித்துள்ளார்.
தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான விமானத்தின் அத்தனைத் தொடர்புகளும் அறுந்து போய்விட்டாலும், விமானத்தின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மட்டும் இன்னும் செயல் நிலையில் உள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை விமானத்தின் இந்த சேட்டிலைட் கம்யூனிகேஷன் லிங்கிலிருந்து சிக்னல் வந்து கொண்டிருக்கிறது. இதனை ‘ஹேன்ட்ஷேக்’ என்று சொல்வார்கள். அதாவது செல்போன் ஆன்டெனா சிக்னல் தேடும்போது வருகிற சமிக்ஞை மாதிரி இது. அந்த ‘ஹேன்ட் ஷேக்’ இருப்பதை வைத்துதான் விமானம் எங்கோ பத்திரமாக தரை இறங்கியிருக்கிறது என்று உறுதியாக நம்புகிறது அமெரிக்கா.
சக விமானி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டு பிறகு பயணம் செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே மலேசிய பிரதமர் பத்திரிகையாளர்களை இன்னும் சிறிது நேரத்தில் சந்திப்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.