பிப்ரவரி 28: சென்னையில் 3 இடங்களில் ராஜீவ்காந்தி சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன்,ராபர்ட் பயாஸ்,ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸôர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காங்கிரஸாரின் இந்தப் போராட்டத்துக்கு தமிழ் இயக்கங்களும், சில அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியினர் சென்னை ராயப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் உள்ள சத்தியமூர்த்தி பவன் அருகே புதன்கிழமை சோனியா காந்தி உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தையறிந்த காங்கிரஸ் கட்சியினர் சத்தியமூர்த்தி பவனில் குவிந்தனர்.
இதற்கிடையே சிறிது நேரத்தில் தமிழர் முன்னேற்றப்படை இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த சுமார் 200 பேர் திடீரென கொடியுடன்,ஆயுதங்களுடனும் சத்தியமூர்த்தி பவனை நோக்கி ஊர்வலமாக வந்தனர். மேலும் அவர்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளைகளை தீ வைத்து எரித்தனர். அதோடு அங்கு ராஜீவ்காந்தி உருவ பொம்மையையும் தீ வைத்து எரித்தனர்.
இந்நிலையில் தமிழக முன்னேற்ற படை ஊர்வலமாக பார்த்த காங்கிரஸ் கட்சியினரும், அவர்களை நோக்கி கூட்டமாக சென்றனர். இதனால் அங்கு இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கற்கள்,ஹெல்மெட்,கட்டை போன்ற பொருள்களால் தாக்கினர். இச் சம்பவத்தில் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனிடையே வேப்பேரி காவல் நிலையம் அருகே ராஜீவ்காந்தி மார்பளவு சிலை வியாழக்கிழமை காலை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அப் பகுதி மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் அதிர்ச்சியடைந்தனர். இதேபோல புரசைவாக்கம் டவுட்டன் அருகே இருந்த ராஜீவ்காந்தி மார்பளவு சிலையும்,ஓட்டேரி காவலர் குடியிருப்பு அருகே பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இருந்த மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து தகவலறிந்த பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் குவிந்தனர். பின்னர் அவர்கள், ராஜீவ்காந்தி சிலையை உடைத்தவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 60 பேரை கைது செய்தனர்.
இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
![]()

