மார்ச்.15, சென்னை, பிரதமர் மன்மோகன் சிங், வைகோ மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை மு.க. அழகிரி சந்தித்து பேசியிருப்பது தி.மு.க.தலைமைக்கு அதிர்ச்சியையும் களக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேர தி.மு.க. தலைவர் கருணாநிதி விரும்பினார். இதற்காக அவரே முன்வந்து விஜயகாந்துக்கு அழைப்பும் விடுத்தார். ஆனால் விஜயகாந்த், தி.மு.க.வை பொருட்படுத்தவே இல்லை. கருணாநிதி அழைப்பையும் நிராகரித்துவிட்டார். தற்போது அவர் பா.ஜ.க. கூட்டணியில் பேச்சு நடத்தி வருகிறார். ஆனால் இதற்கெல்லாம் முன்பாகவே தே.மு.தி.க.வுடன் கூட்டு சேருவதை மு.க.அழகிரி விரும்பவில்லை. இதை பகிரங்கமாகவே அவர் தெரிவித்தார். இந்த விஷயத்தில் தி.மு.க. தலைமைக்கும் அழகிரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட மகன் என்றும் பாராமல் அழகிரியை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கினார் கருணாநிதி. கேவலம் கூட்டணிக்காக மகனையே தூக்கி எறிந்தார் கருணாநிதி. அழகிரியின் ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். தி.மு.க. வேட்பாளர் பட்டியலிலும் அழகிரியின் பெயர் இல்லை. அவரது ஆதரவாளர்களுக்கும் சீட்டு இல்லை.
இந்தநிலையில் மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன் என்று அழகிரி கூறினாலும் சில அந்தரங்க வேலைகளை அவர் செய்யாமல் இல்லை. டெல்லியில் நேற்றுமுன்தினம் மு.க. அழகிரி,பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியுள்ளார். 5 ஆண்டுகாலம் அமைச்சரவையில் பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணியை முறித்துவிட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரதமரை அழகிரி ஏன் சந்தித்தார் என்பதுதான் புரியாத புதிர். அதுமட்டுமல்ல ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் அழகிரி சந்தித்து பேசியுள்ளார். 1993-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார் வைகோ. அப்போது வைகோவின் தூண்டுதலின்பேரில்தான் விடுதலைப்புலிகள் என்னை திட்டமிட்டார்கள் என்று கருணாநிதி குற்றம்சாட்டி வைகோவை வெளியேற்றினார். ஆனால் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது, அபாண்டமானது என்று மறுத்தார் வைகோ. அதன் பிறகுதான் அவர் ம.தி.மு.க.வை ஆரம்பித்தார்.
மு.க.ஸ்டாலின் உடல்நலம் தொடர்பாக அழகிரி கூறிய கருத்தை ஒரு கட்சி தலைவர் என்ற முறையில் என்னால் எப்படி பொருக்க முடியும் என்று சமீபத்தில் கருணாநிதி தன் மகன் அழகிரி மீது குற்றம்சாட்ட அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அழகிரியும் இந்த குற்றச்சாட்டு அபாண்டமான குற்றச்சாட்டு என்று மறுத்தார். அன்று வைகோ மீது குற்றம் சாட்டப்பட்டது. இன்று அழகிரி மீது குற்றம் சாட்டியிருக்கிறார் கருணாநிதி. இந்த ஒரு அம்சத்தை முன்வைத்து அழகிரியும் வைகோவும் சந்தித்து பேசினார்களாம். அப்போது வைகோ வெற்றிபெற அழகிரி வாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சந்திப்புகள் எல்லாம் தி.மு.க. தலைமைக்கு களக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியையும் சந்தித்து உள்ளார் அழகிரி. இருவரும் சில நிமிடங்கள் பேசினார்களாம். இந்த சந்திப்பும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள நிலையிலும் தி.மு.க. தலைமைக்கு எதிராக அழகிரி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார். பாராளுமன்ற தேர்தலிர் பணம் கொடுத்தவர்களுக்கே தி.மு.க.வில் சீட்டு வழங்கப்பட்டதாகவும் அழகிரி கூறிய குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் தேர்தல் நேரத்தில் அழகிரி மீது மேலும் நடவடிக்கை எடுத்தால் அது தேர்தலை பாதிக்கும் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தவிக்கிறது தி.மு.க. மேலும் குழப்பத்திலும் ஆழ்ந்திருக்கிறது தி.மு.க. மேலிடம். மன்மோகன் சிங், வைகோ, ரஜினி ஆகியோரை சந்தித்ததன் மூலம் மு.க. அழகிரி ஏதோ ஒரு திட்டத்தில் இருப்பது மட்டும் நன்றாகவே தெரிகிறது.
![]()

