ஜூலை 16, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் மற்றும் ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கு எதிராக பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து நிர்பந்தம் கொடுக்க வேண்டும் என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
பிரேசில், இந்தியா, சீனா, ரஷியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை அங்கமாக கொண்ட “பிரிக்ஸ்’ அமைப்பின் 6-வது உச்சி மாநாடு, பிரேசில் நாட்டின் ஃபோர்டாலிசா நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ஆற்றிய உரை:
ஆப்கானிஸ்தான் முதல் ஆஸ்திரேலியா வரை பிரச்னைகள் சூழ்ந்துள்ளன. பயங்கரவாதம் மனித வாழ்வுக்கு எதிரானது என்பதால் அதை எந்த வடிவிலும் ஏற்றுக் கொள்ள முடியாது; அணுஅளவும் அதனைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது. பயங்கரவாதிகளுக்கு புகலிடமோ, ஆதரவோ அளிக்கக் கூடாது என்று அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளை பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து நிர்பந்திக்க வேண்டும்.
பயங்கரவாதம் போரைப் போன்றது. பயங்கரவாதத்தால் அப்பாவி மக்கள் மீது மறைமுகப் போர் தொடுக்கப்படுகிறது. அதை சர்வதேச சமூகத்தால் முழுமையாக ஒடுக்க முடியவில்லை. மனிதாபிமானத்தால் ஒன்றிணைந்து, பயங்கரவாத சக்திகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். பிரிக்ஸ் நாடுகள் எடுக்கும் முடிவு உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கையாக மாற வேண்டும்.
சர்வேதச பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்து விரிவான வரைவு உடன்படிக்கையை ஐ.நா. விரைவில் கொண்டு வர வேண்டும். பொருளாதார சீரழிவும், ஸ்திரத்தன்மையற்ற நிலைமையையும் உலகம் சந்தித்து வரும் நிலையில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் எடுக்கப்படும் புதிய வர்த்தகம் தொடர்பான உடன்பாடுகளின் மூலம் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி, வளரும் நாடுகளில் உள்ள பின்தங்கிய சமுதாயத்தினருக்கும் பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும். குறிப்பாக உணவுப் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பிரிக்ஸ் நாடுகள் ஏற்படுத்த உள்ள புதிய அமைப்பு (பிரிக்ஸ் நாடுகள் மேம்பாட்டு வங்கி) புதிய உத்திகளுடன் செயல்பட வேண்டும். சர்வதேச பொருளாதாரத்தை மீட்டு, ஸ்திரத்தன்மையுடன் செயல்பட உதவ வேண்டும். நமது மேம்பாட்டு நடவடிக்கைகள் உறுப்பு நாடுகளின் வளர்ச்சியை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். உள்கட்டமைப்பு, மலிவுவிலை வீடுகள், மருத்துவ நலன், கல்வி, இயற்கை எரிசக்தி ஆகியற்றில் இந்தியா அதிக அளவு முதலீடு செய்ய உள்ளது என்று மோடி கூறினார்.
உதயமானது பிரிக்ஸ் வங்கி:
பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாளில், பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியை 10,000 கோடி டாலர் முதலீட்டில் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்தியாவின் வலியுறுத்தலை ஏற்று பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் அனைத்தும் இந்த வங்கியில் தலா 2,000 கோடி டாலர் முதலீட்டுடன் சமபங்கு வகிக்கும். இந்த வங்கியின் தலைமையகம் சீனாவின் ஷாங்காய் நகரில் அமையவுள்ளது. அதேநேரத்தில் இந்த வங்கியின் முதல் தலைவர் பதவி இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது. இதேபோல் வங்கி இயக்குநர்கள் குழுவின் தலைவர் பதவி ரஷியாவுக்கு அளிக்கப்படவுள்ளது. பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி உதயமாகியிருப்பது இந்தியாவுக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்த வங்கி பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு மட்டுமின்றி, அனைத்து வளர்ந்துவரும் நாடுகளுக்கும் பயனுள்ளதாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சீன அதிபருடன் சந்திப்பு:
பிரிக்ஸ் மாநாட்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்தார். 80 நிமிடம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, எல்லைப் பிரச்னை குறித்து ஜீ ஜின்பிங்குடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பு குறித்து, டுவிட்டர் இணையதளத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடனான சந்திப்பு நல்லமுறையில் அமைந்திருந்தது. பல்வேறு விவகாரங்கள் குறித்து நாங்கள் இருவரும் ஆலோசனை நடத்தினோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். சீனாவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பு (அபெக்) மாநாட்டுக்கு வருமாறு மோடிக்கு ஜீ ஜின்பிங் அழைப்பு விடுத்தார்.
![]()


