boating-accident

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேருக்கு அருகில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் 16 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெற்கு அந்தமான் மாவட்டத்தின் துணை ஆணையர் பி.ஜவஹர் கூறினார்.

காஞ்சிபுரம் மற்றும் மும்பையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்பட 51 பேர் ரோஸ் தீவிலிருந்து நார்த் பே என்ற பகுதிக்கு படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 29 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவரைக் காணவில்லை.

இறந்தவர்களில் 16 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களின் பெயர் விவரம்

டி.செல்வராஜ், கே.கருணாகரன், டபிள்யூ.ஜி.கணபதி, துரை ஜெயக்குமார், எஸ்.பெருமாள், ஜெ.உஷா, சுஷீலா, கே.வனஜா, எஸ்.தர்ஷிணி, சாந்தாபாய், சாந்திபாய், அனுசுயா, பி.மீனாள், எஸ்.மணிகண்டன், அனுராதா, அஞ்சலம் ஆகியோர் உயிரிழந்தனர்.

மீதமுள்ள 5 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்கப்பட்டவர்கள் போர்ட் பிளேரில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

25 பேர் மட்டுமே பயணம் செய்யக் கூடிய படகில், 51 பேர் பயணம் செய்ததே, விபத்துக்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஞ்சிபுரம் பட்டுநூல் வியாபர குடும்பத்தினர்: படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் காஞ்சிபுரத்தின் பி.எஸ்.கே. தெரு, மின்நகர், கிருஷ்ணன் தெரு, டி.கே. நம்பி தெரு உள்ளிட்ட தெருக்களைச் சேர்ந்த் பட்டுநூல் வியாபாரக் குடும்பத்தினர் ஆவர்.

இவர்களில் மொத்தம் 32 பேர் அந்தமானுக்குச் சுற்றுலாவுக்காகச் சென்றனர். இவர்களில் 16 பேர் படகு விபத்தில் உயிரிழந்துள்ளனர். 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவரைக் காணவில்லை.

கட்டுப்பாட்டு எண்:  அந்தமான் கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண்: 03192-240127, 238881, 230178 மருத்துவமனை தொலைபேசி எண்: 03192-230629

இழப்பீடு: விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர் ஏ.கே.சிங் அறிவித்துள்ளார். இதேபோல் தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

விபத்து குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த தெற்கு அந்தமானின் கூடுதல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் இரங்கல்: விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Loading