thirumavalavan

அரியலூர்: சிதம்பரம் தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடப்போவதாக என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்ட கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வன்கொடுமைதடுப்புச்சட்டம் திருத்த மசோதாவை கொண்டுவந்து நிறைவேற்றவேண்டுமென காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளதாக கூறிய அவர், அந்த மனுவில் வருகிற மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மனித உரிமைக்கூட்டத்தில் இலங்கை மீதான போர்குற்ற விசாரணை தொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அதேசமயம் இதனை முன்கூட்டியே இந்திய அரசு அறிவிக்கவேண்டும் என வற்புறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், “தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்த பின்னரும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் தற்காலிகமாக தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆழ்கடலில் மீன்பிடிக்க பயன்படுத்தும் படகுகள் மற்றும் இரட்டைவலைகளை இந்திய அரசே வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அதில் வலியுறுத்தியுள்ளேன்.

வகுப்புவாதகட்சியான பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை இன மக்களுக்கு மட்டுமின்றி ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. அரசியல் அமைப்புச்சட்டத்தை அடியோடு மாற்றுவதோடு இடஒதுக்கீடு என்ற கொள்கைக்கு சவகுழி தோண்டுவார்கள் .

சேது சமுத்திர திட்டத்தை நடைமுறைபடுத்தவிடமாட்டார்கள். ஈழவிவகாரம் மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்னையில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே ஒரே கொள்கையைத்தான் கொண்டுள்ளது.
இலங்கைத்தமிழர்களின் விடுதலைக்கு பாடுபடுவோம் என்ற பா.ஜ. கவின் பேச்சு தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகும். மூன்றாவது அணி என்பது எப்போதும் வெற்றிகரமாக அமைந்ததில்லை. அவ்வாறு அமைந்த ஆட்சிகள் நீண்ட நாட்கள் நீடித்ததுமில்லை. இதனால் மதவெறி, சாதிவெறி சக்திகளுக்கு ஊக்கமளித்துவிடக்கூடாது என்பதற்காக திமுக கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என வேணடுகோள் விடுக்கிறேன்.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய பின் பல்வேறு கட்சிகள் தற்போது இணைந்துள்ளன. இதனால் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இன்னும் பல்வேறுபணிகள் செய்ய வேண்டி உள்ளதால் மீண்டும் அத்தொகுதியில் நான் போட்டியிடுவேன்” என்று கூறினார்.

Loading