புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் ஸ்டிரைக் செய்கின்றனர். தமிழகத்தில் 11,200 வங்கி கிளைகளில் பணிகள் முடங்கின. பல பகுதிகளில் ஏடிஎம்களில் பணம் இல்லாததால் வாடிக்கை யாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வங்கி ஊழியர்களுக்கு ஏற்கனவே போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் கடந்த 30.10.2012ம் ஆண்டுடன் முடி வடைந்தது. அதன் பிறகு புதிய ஊதிய ஒப்பந்தம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதற்காக வங்கி ஊழியர்கள் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கான உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கிகளை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். சுமார் 2 லட்சம் கோடி வரையுள்ள வராக்கடனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
இதன்படி, நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 26 பொதுத்துறை வங்கிகள், 10 தனியார் வங்கிகள், 6 அயல்நாட்டு வங்கிகள், 42 கிராமிய வங்கிகளின் ஊழியர்கள் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளனர்.தமிழகத்தில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சுமார் 1 லட்சம் பேர் ஸ்டிரைக்கில் கலந்து கொண்டுள்ளனர்.
இதனால், தமிழகம் முழுவதும் உள்ள 11,200 வங்கி கிளைகளில் பணிகள் முடங்கியுள்ளன. சென்னையில் மட்டும் 1,400 வங்கி கிளைகளில் இன்று எந்த பரிவர்த்தனையும் நடைபெறவில்லை. பண பரிவர்த்தனை, காசோலை பரிமாற்றம் உள்பட அனைத்து பரிவர்த்தனைகளும் முடங்கியுள்ளன. வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள், பொது மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
ஸ்டிரைக் குறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:
வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் 10 கோடி காசோலைகள் பரிவர்த் தனை ஸ்தம்பித்துள்ளது. இதன் மூலம், 7 லட்சத்து 64 ஆயிரம் கோடி பணம் முடங்கியுள்ளது. சென்னையில் 90 லட்சம் காசோலைகள் மூலம் ரூ.64 ஆயிரம் கோடி பரிவர்த்தனை முடங்கியுள்ளது. இதற்கு மத்திய அரசே முழு பொறுப்பு. எங்களுடைய கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் எங்களுடைய போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்.
இவ்வாறு வெங்கடாசலம் கூறினார். கோரிக்கையை வலியுறுத்தி பிராட்வேயில் இன்று காலை வங்கி ஊழியர்கள் பங்கேற்ற பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏடிஎம் சேவை: ஊழியர்கள் ஸ்டிரைக்கால் தமிழகத்தில் உள்ள 7500 ஏடிஎம் மையங்களிலும் பணம் இருப்பு குறைந்து வருகிறது. சென்னையில் உள்ள 600 ஏடிஎம்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் தினமும் பணம் வைக்கப்படும். சனி, ஞாயிற்று கிழமைகளில் குறைந்த அளவே பணம் வைக்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்டிரைக் காரணமாக ஏடிஎம்மில் பணம் வைக்கப்படும் சேவையும் பாதித்துள்ளது. இதனால், ஏடிஎம்களில் பணம் குறைந்து வருகிறது. சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் வங்கி ஏடிஎம்கள் செயல்படவில்லை. ஏடிஎம்களுக்கு வெளியே பணம் இல்லை என்ற போர்டு தொங்கவிடப்பட்டிருந்தது.
![]()

