மே தினம் விடுமுறை என்பது மட்டுமே பலருக்குத் தெரியும். ஏன் அந்த விடுமுறை? அந்த விடுமுறைக்குப் பின்னால் உள்ள வரலாறு என்ன என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இங்கிலாந்து

19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சி யடைந்த நாடுகளில் தொழிலாளிகள் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists) அதற்கெதிராக தொழிலாளர்களின் உரிமைக்காக உலகெங்கிலும் பல போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

பிரான்ஸ்

1830களில் பிரான்சில் நெசவுத்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது. இதை எதிர்த்து அவர்கள் 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன் வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் தொழிலாளிகள் உலகிலேயே முதன்முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும்
பெற்றனர்.

ரஷ்யா

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். 1895 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது.

அமெரிக்கா

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டு, இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

சிக்காகோ

மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார்வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணிதிரண்டு கண்டனக் கூட்டத்தில் 4 தொழிலாளர்கள் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். தொழிலாளர் தலைவர் 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

அனைத்து நாடுகளிலும் மே தினம் 1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘‘சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உள்ளிட்ட 400 பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்தியபடி 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டு மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

சிங்கப்பூர்

சிங்கப்பூரைப் பொறுத்தவரை, 1960-ஆம் ஆண்டு, மே முதல் தேதி பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்காக உழைப்போரை அங்கீகரிக்கும் வகையில் சம்பளத்துடன் கூடிய ஓய்வு நாளாக அது வழங்கப்படவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

ஆண்டுதோறும் சிங்கப்பூரில் மே முதல் தேதியன்று, தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் மே தினப் பேரணிக்கு ஏற்பாடு செய்கிறது.

இந்தியா

இந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான சிங்காரவேலர் 1923ல் சென்னை கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.

Loading