தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறையில் மாற்றம் செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவல்களால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. குறிப்பாக, ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா அல்லது ஜனவரி 5ஆம் தேதியா என்ற கேள்வி பலரிடையே எழுந்தது. இதற்கு தற்போது தமிழக பள்ளிக் கல்வித்துறை தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை 2024–2025 கல்வியாண்டிற்கான கல்வி கால அட்டவணையை முன்பே வெளியிட்டிருந்தது. அதன்படி, 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற, 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் தேர்வுகள் முடிவடைந்த பின், டிசம்பர் 24ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை மொத்தம் 12 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனால் பாடத்திட்டம் பாதிக்கப்படலாம் என்ற காரணத்தால், அரையாண்டு விடுமுறையை குறைத்து ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் பரவத் தொடங்கியது. இந்த தகவல் பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. அதில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணையில் எந்தவித மாற்றமும் இல்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படும் என்றும், ஜனவரி 5ஆம் தேதி (திங்கட்கிழமை) அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். விடுமுறை காலத்தில் மாணவர்கள் உடல் மற்றும் மன ஓய்வு பெறுவதோடு, புதிய பாடங்களுக்கு தயாராகிக் கொள்ளலாம் என்றும் கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
![]()

