பிப்ரவரி 28: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை விட, பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அதிகமாக உள்ளது என்று அமெரிக்க நிறுவனம் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு பியூ ரிசர்ச் சென்டர் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. சமூக மாற்றங்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவ்வப்போது கருத்து கணிப்பு நடத்தி இந்த மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து இந்தியாவில் பல மாநிலங்களில் பியூ ஆய்வு மையம் 2,464 பேரிடம் கருத்து கணிப்பு நடத்தி உள்ளது. கடந்த டிசம்பர் 7ம் தேதி முதல் ஜனவரி 12ம் தேதி வரை நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்த விவரங்கள் பியூ மையம் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை விட, பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை அதிகமானோர் விரும்புகின்றனர்.
அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மோடியை ஆதரிக்கின்றனர். காங்கிரசுக்கு 20 சதவீதத்துக்கும் குறைவாகவே ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்தியாவில் அடுத்து பா.ஜ. ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பா.ஜ., காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பியூ மையம் தெரிவிக்கவில்லை. எனினும், இந்தியர்கள் 10 பேரில் 6க்கும் மேற்பட்டவர்கள், அடுத்து பா.ஜ. ஆட்சி அமைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். மேலும் கிராமங்கள், நகரங்கள் என்ற வித்தியாசம், வயது வித்தியாசம் இல்லாமல், காங்கிரசை விட பா.ஜ. ஆட்சி அமைய விரும்புகின்றனர் என்று பியூ மையம் தெரிவித்துள்ளது.
![]()

