அரசுப்பேருந்து ஓட்டுநர்களுக்கும் சீட் பெல்ட் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
சமீபத்தில் கார் ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணிந்து தான் காரை ஓட்ட வேண்டும் என கட்டாயமாக்கியது தமிழக அரசு. அதனை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மோட்டார் வாகனச் சட்டப்படி கார் ஓட்டுனர்கள் மட்டுமல்ல, பேருந்து ஓட்டுனர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும். எனவே, அதற்கான வசதியை அவர்களுக்கு ஏற்படுத்தித் தாருங்கள் என வழக்கறிஞார் பிரகாஷ் ராஜ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மோட்டார் வாகன சட்டத்தின்படி கார் மற்றும் பேருந்து ஓட்டும் ஓட்டுனர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். அவ்வாறு அணியாத கார் ஓட்டுனர்களுக்கு சென்னை மாநகர பொலிசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.
அதே நேரம் அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு ‘சீட் பெல்ட்’ வசதி இல்லாமல் உள்ளது. இந்த பேருந்துகள் விபத்தில் சிக்கும்போது டிரைவர்கள் உயிரிழக்கின்றனர்.
எனவே மோட்டார் வாகன சட்டத்தின்படி தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளிலும் சீட் பெல்ட் மற்றும் தீயணைப்பு கருவி பொருத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்’என தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி ரவிச்சந்திரபாபு ஆகியோர், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

