வேலூர், மார்ச் 12: சொத்து தகராறில் பெற்றோரை கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்.
ஆற்காடு அடுத்த பரதராமி நாகுன் குட்டையைச் சேர்ந்தவர் மணி, 55. விவசாயி. இவர், மனைவி வசந்தா, 47. இவர்களுக்கு, முரளிதரன், 24, ஞானப்பிரகாசம், 22, சிவசக்தி, 19 ஆகிய, மூன்று மகன்கள் உள்ளனர். மகன்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மூத்த மகன் முரளிதரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடைசி மகன், சிவசக்திக்கு, சிறு நீரக கோளாறால் இறந்து விட்டார். இதனால், தனக்கு பின்னால், தன் குடும்பத்தை, இரண்டாவது மகன் ஞானப் பிரகாசம் தான் காப்பாற்ற வேண்டும் என்பதால், அவர் மீது அனைத்து சொத்துக்களையும், பெற்றோர் எழுதி வைத்தனர். இதனால், முரளிதரனுக்கும், அவரது பெற்றோருக்கும் அடிக்கடி தகராறு நடந்தது. சம்பவத்தன்று இரவு, 10 மணிக்கு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த முரளிதரன், சொத்து பிரச்னை குறித்து தகராறு செய்தார்.
சொத்தை எழுதி தர பெற்றோர் மறுத்ததால், ஆத்திரமடைந்த முரளிதரன் கத்தியால், தந்தை மணி, தாய் வசந்தாவை, தலை, கழுத்து பகுதிகளில் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து, திமிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, முரளிதரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
![]()

