மார்ச் 06: அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டில் முன்னேற்றம் இல்லை என்றும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் பேசிய பிறகு முடிவெடுக்கப்படும் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கிடையே அ.தி.மு.க. சார்பில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்தார்.
கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, இரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்படும் இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் அறிவித்து, தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
அதனை தொடர்ந்து கம்யூனிஸ்டு கட்சிகளுடன் அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் தலா 6 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று முதலில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு அ.தி.மு.க. தலைமை சம்மதிக்கவில்லை. இரு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதியை மட்டுமே வழங்க முடியும் என்று கூறியதாக தெரிகிறது.
தொகுதி பங்கீடு தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இருப்பினும் தொகுதி பங்கீட்டில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாக குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக தியாகராயநகரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரெங்கராஜன் எம்.பி. உள்பட நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:–அ.தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது?
பதில்:–அ.தி.மு.க.வுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடந்தது. இருப்பினும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை.
கேள்வி:–தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் நீடிக்குமா?
பதில்:–இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு அவர்களை சந்தித்து பேச இருக்கிறோம். அவர்களுடன் இணைந்து பேசி முடிவெடுப்போம்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
![]()

