Budget 2014, Income tax slabs unchanged; cars to be cheaper

கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் சுக்குப்பாறைத்தேரிவிளையில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு, காமராஜர் சிலையை திறந்து வைத்து பேசினார்.

பெருந்தலைவர் காமராஜரை நினைக்கும் போது, ஒரு சகாப்தத்தை, ஒரு யுகத்தை நினைத்து பார்க்கிறோம். காமராஜர் என்ற பெயர் ஒரு தலைமுறையை கடந்து நம்மோடு வாழ்வது தான் அதன் சிறப்பு. இன்னும் நூறு ஆண்டுகள் அவர் சிலைகள் அமைக்கப்படும், புகழ் பாடப்படும்.

காமராஜர் தமிழகத்தில் முதல்–அமைச்சராக இருந்தார். அதன்பிறகு பலரும் இருந்தனர், இருந்து வருகிறார்கள். யாரோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்ந்த தலைவர் காமராஜர்

கடந்த 15-9-2008 முதல் உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது.

ஜெர்மன் நாட்டை தவிர மற்ற நாடுகளில் 2½ சதவீதம் வளர்ச்சி சரிந்தது. சராசரி 7½ சதவீத வளர்ச்சி அடைந்த இந்தியாவின் சரிவை 5 சதவீதமாக தடுத்து நிறுத்தி இருக்கிறோம். நம் வளர்ச்சி சரிந்த போது தான் ரூபாய் மதிப்பு சரிந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் டாலர் மதிப்பு ரூ.68 ஆக இருந்தது. அந்த சரிவை ரூ.61 ஆக உயர்த்தி இருக்கிறோம்.

வளர்கின்ற நாடுகள் வரிசையில் இந்திய பொருளாதாரம் இருக்கிறது. இந்தியா 5 சதவீத வளர்ச்சி அடைகிறது என்றால் மாநிலங்களை தவிர்த்து அல்ல. மாநிலங்களை தவிர்த்து நிலம் என்பது இந்திய அரசுக்கு கிடையாது.

இந்தியாவின் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சி, ஆந்திரா, கேரளா, மராட்டியம், டெல்லி ஆகியவற்றின் சராசரி வளர்ச்சி தான். மாநிலங்களின் வளர்ச்சி வேறு, இந்தியாவின் வளர்ச்சி வேறு என்று பிரித்து பார்க்க முடியாது. இந்தியா என்பது அனைத்து மாநிலங்களையும் கொண்டது. அப்படி பார்க்கும் போது இந்தியாவின் வளர்ச்சி குறைந்து விட்டது என்று குரல் கொடுக்கிறார்கள். மாநிலங்களின் வளர்ச்சி எந்த அளவு இருக்கிறது? தமிழ்நாட்டின் வளர்ச்சி என்ன?

தமிழ்நாட்டில் 5 சதவீதத்துக்கும் குறைவாக வளர்ச்சியை காட்டி விட்டு, இந்தியாவை பார்த்து நீங்கள் 5 சதவீத வளர்ச்சி என்று குறை சொன்னால் எப்படி? நீங்கள் 5 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி அடைந்தால் தானே இந்தியா 5 சதவீதத்துக்கு மேல் வளரும். உங்கள் சராசரி 5–க்கு கீழே இருந்தால் இந்தியாவின் சராசரி எப்படி உயரும். அதற்கு என்ன காரணம் என்று பார்க்க வேண்டும்.

பல மாநிலங்களிலே வளர்ச்சி குறைந்ததற்கு காரணம் முதலீடு குறைந்தது தான். முதலீடு என்பது ஒரு பொருளாதார குறியீடு. மானியம் என்பது ஒரு பொருளாதார குறியீடு. இலவசம் என்பது ஒரு பொருளாதார குறியீடு. 3–க்கும் உள்ள வேறுபாட்டை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் நெய்வேலியில், தூத்துக்குடியில் செய்தது முதலீடு. திருச்சியில் பெல் தொழிற்சாலை அமைத்தது முதலீடு. அணைகளை கட்டி கோடிக்கணக்கான ரூபாய்களை முடக்கியது முதலீடு. நெடுஞ்சாலை போட்டால் முதலீடு. முதலீட்டின் பயன் உடனடியாக தெரியாது. ஒரு தலைமுறை காத்திருக்க வேண்டும்.

காமராஜரின் காலம் முதலீட்டு காலமாக அறிவிக்கலாம். அதன்பிறகு ஒரு காலம் மானியங்கள் தர வேண்டிய காலம். நான் மானியங்களுக்கு எதிர்ப்பு அல்ல, மத்திய அரசே மானியங்களை தருகிறது. மக்களுக்கு தேவை என்றால் மானியம் தரத்தான் வேண்டும். முதலீட்டை மறந்து விட்டு மானியத்தை தர முடியாது.

எந்த நாடு முதலீடு செய்கிறதோ, அந்த நாட்டில் தான் வேலைவாய்ப்பு உருவாகும்.

வேலை வாய்ப்பை உருவாக்காமல் கல்வியை வளர்ப்பதில் என்ன பயன். வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

முதலீட்டில் மாநில அரசுகள் அக்கறை செலுத்த வேண்டும். முதலீட்டில் அரசியல் கட்சிகள் அக்கறை செலுத்த வேண்டும். முதலீட்டின் பெருமையை, அதன் முக்கியத்துவத்தை அறிந்து அரசியல் கட்சிகளை வெற்றி பெற செய்ய வேண்டும்.

காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்ந்தது. அந்த நிலையில் இருந்து தாழ்ந்து இருக்கிறோம். அரசின் வருவாயில் பெரும் பகுதி முதலீடுக்கு போக வேண்டும்.

Loading