மார்ச் 13, மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியில், திடீரென சீன அரசு ஏஜென்சி ஒன்று, கடந்த ஞாயிற்றுக் கிழமை (விமானம் காணாமல் போனதற்கு மறுதினம்) கடலில் மூன்று பெரிய ‘சந்தேகத்துக்குரிய வஸ்துகள்’ மிதப்பதை தமது சாட்டலைட் பதிவு செய்துள்ளது என்ற தகவலை தற்போது வெளியிட்டு, சாட்டலைட் போட்டோக்களையும் வெளியிட்டுள்ளது.
மலேசியன் விமானம் எங்கே போனது என்பதே, நவீன விமானப் போக்குவரத்து மிகப்பெரிய, நீடிக்கும் மர்மமாக உள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமையே பதிவாகிய இந்த சாட்டலைட் போட்டோக்களை சீன அரசு ஏஜென்சி எதற்காக இவ்வளவு நாளும் வெளியிடாமல், இப்போது திடீரென வெளியிடுகிறது என்பதற்கு விளக்கம் ஏதும் அவர்களிடம் இருந்து வரவில்லை.
சீனாவின் அரசு ஏஜென்சியான SASTIND (State Administration for Science, Technology and Industry for National Defence) இந்த சாட்டலைட் போட்டோக்களை வெளியிட்டுள்ளது.
இவற்றை, ‘கடலில் மிதக்கும் சந்தேகத்துக்குரிய வஸ்துகள்’ (‘suspicious floating objects’) என குறிப்பிடும் சீன ஏஜென்சி, “விமானம் விபத்துக்குள்ளாக சாத்தியமுள்ள ஏரியாவில் எடுக்கப்பட்ட சாட்டலைட் போட்டோக்கள் இவை” எனவும் குறிப்பிட்டிருப்பது, மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
காரணம், “விமானம் விபத்துக்குள்ளாக சாத்தியமுள்ள ஏரியா” என சீன ஏஜென்சி குறிப்பிடும் இடம், கோலாலம்பூருக்கு வட-கிழக்கிலும், வியட்நாமுக்கு தெற்கிலும் உள்ள கடல்பகுதி.
கிட்டத்தட்ட இந்த ஏரியாவில்தான் முதலில் மும்மரமாக தேடினார்கள். அதன்பின், விமானம் மலாக்கா கடல்பகுதிக்கு அருகே ராணுவ ரேடாரில் பதிவானது என்ற தகவல் வெளியாகியது. அந்த கடல்பகுதி, சீன ஏஜென்சி குறிப்பிடும் கடல்பகுதி அல்ல. இதிலிருந்து மலேசிய நிலப்பரப்பையும் கடந்து, மேற்கே இந்தோனேசிய கடலுக்கு அருகில் உள்ள பகுதி.
அந்தப் பகுதியில் நேற்றுமுதல் அனைவரின் கவனமும் பதிந்திருக்க, திடீரென சீன ஏஜென்சி, அந்த கடல்பகுதிக்கு கிழக்கே மற்றொரு கடல்பகுதியில் ‘கடலில் மிதக்கும் சந்தேகத்துக்குரிய வஸ்துகள்’ என சாட்டலைட் போட்டோக்களை வெளியிடுகிறது.
சீன ஏஜென்சி குறிப்பிடும் இந்த கடல்பகுதி, மலேசிய விமானம் கடைசியாக சிவிலியன் ஏர்-ட்ராபிக் கன்ட்ரோல் டவருடன் தொடர்புகொண்ட இடத்துக்கு அருகேயுள்ளது. ஆனால், அதன்பின் விமானத்தை ராணுவ ராடார் டிடெக்ட் பண்ணிய இடத்தில் இருந்து சுமார் 500 கி.மீ. கிழக்கே உள்ளது.
சீனாவின் SASTIND அல்லது, State Administration for Science, Technology and Industry for National Defence வெளியிட்டுள்ள தகவலின்படி, இவர்களது சாட்டலைட்டில் போட்டோ பிடிக்கப்பட்ட ‘வஸ்துகள்’ மூன்றும் முறையே, 22X24 மீட்டர், 14X19 மீட்டர், மற்றும், 13X18 மீட்டர் அளவுள்ளவை.
இங்குள்ள மற்றொரு விஷயம், இதே கடல்பகுதியை கண்காணிக்கும் பொசிஷனில், அமெரிக்க சாட்டலைட்டுகள் இரண்டு உள்ளன. அமெரிக்க பாதுகாப்புதுறை அதிகாரிகள் நேற்று பென்டகனில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமது சாட்டலைட் போட்டோக்களில், விபத்து தொடர்பான எந்த தடயமும் இல்லை என்றார்கள்.
SASTIND-ன் தியரி என்ன? விமானம் மலாக்கா கடல் பகுதியில் இருந்து மீண்டும் கிழக்கு நோக்கி வந்தது என்கிறார்களா? அல்லது, விமானம் மலாக்கா பகுதிக்கே வரவில்லை என்கிறார்களா? சீனர்களிடம்தான் கேட்கவேண்டும்.
![]()

