மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். அத்துடன், கருப்பு, சிவப்பு, வெள்ளை இடையே ஜெயலலிதா படத்துடனான கொடியையும் அறிமுகம் செய்தார்.

அதற்கடுத்து 15 நிமிடங்கள் பேசிய தினகரன், 108 அடி பிரமாண்ட கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். அதன்பின் கட்சியின் உறுப்பினர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. திமுகவின் கொடி கறுப்பு சிவப்பு. திமுகவில் இருந்து பிரிந்த எம்ஜிஆர் அண்ணா திமுக என்ற கட்சியை தொடங்கிய போது கறுப்பை வெள்ளை சிவப்பு நிறத்தில் அண்ணாவின் உருவம் கொண்ட கொடியை அறிமுகம் செய்தார்.

TTV Dhinakaran Hosted new Party Flag

அதிமுகவின் பெயரையும், சின்னத்தையும் நாங்கள் மீட்டெடுப்போம் எனக் கூறிவரும் டிடிவி தினகரன் அதுவரை தங்களுக்கு ஓர் அடையாளம் வேண்டும் என்பதால் கட்சியின் பெயரும், கொடியும் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறியிருந்தார். இந்த அமைப்பும், கொடியும் இரட்டை இலையை மீட்கும் வரைதான் என்றும் கூறியுள்ளார்.

அம்மா முன்னேற்ற கழகம்:

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஏதுவாக தங்கள் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து அதில் அண்மையில் வெற்றியும் அடைந்தார் டிடிவி தினகரன்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். தமிழகத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக தங்கள் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குக்கர் சின்னத்தை உள்ளாட்சித் தேர்தலுக்காக வென்ற கையோடு புதிய கட்சிப் பெயர் அறிவிப்பையும், கொடியையும் தினகரன் அறிவித்திருக்கிறார்.

Loading