17yr old girl stages kidnap with help of boyfriend

கோவையில் தந்தையிடம் ரூ.20 லட்சம் கேட்டு பணம் பறிப்பதற்காக, காதலனுடன் சேர்ந்து பிளஸ்–2 மாணவி ஒருவர் கடத்தல் நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோவை சிங்காநல்லூர் வெள்ளலூர் ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் சுகன்யா (வயது 17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் பிளஸ்–2 படித்து வருகிறார்.

நேற்று மாலை சுகன்யா கடைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் கிருஷ்ணனுக்கு சுகன்யாவின் செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

அதில் பேசிய மர்ம நபர் “உங்கள் மகளை கடத்தி வைத்துள்ளோம். ரூ.20 லட்சம் கொடுத்தால் விடுவிப்போம் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்தார். இது பற்றி கிருஷ்ணன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

இதற்கிடையே மீண்டும் கிருஷ்ணனின் செல்போனுக்கு அந்த மர்ம நபர் தொடர்பு கொண்டார். ரூ.20 லட்சம் பணம் என்ன ஆனது? என்று மிரட்டல் விடுத்தார்.

அதற்கு கிருஷ்ணன் பணம் உடனடியாக இல்லை. பணத்திற்கு உறவினர்களிடம் கூறியுள்ளேன் என்று சமாளித்தார். எனவே அந்த மர்ம நபர் மீண்டும் அழைப்பதாக கூறி போனை துண்டித்தார்.

போலீசார் கிருஷ்ணனுக்கு வந்த செல்போன் எண்ணின் டவரை கண்காணித்தனர். கோவை காந்திபுரத்தில் இருந்து பேசியிருப்பது தெரியவந்தது.

போலீசார் காந்திபுரத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆவராம்பாளையம் ரோட்டில் நள்ளிரவு 1 மணிக்கு ரோந்து சென்ற போது பள்ளி மாணவி ஒருவர் வாலிபருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.

போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்தனர். அப்போது அது கடத்தப்பட்ட மாணவி சுகன்யா என்று தெரியவந்தது. மாணவியை மீட்ட போலீசார் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில் மாணவியே தான் கடத்தப்பட்டதாக நாடகமாடியது தெரிய வந்தது. அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

என் தந்தை கிருஷ்ணன் மின்சார வாரியத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக நான் செல்லப்பிள்ளையாக வளர்க்கப்பட்டு வந்தேன்.

தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் படிக்கும் மாணவர் கார்த்திகேயனுடன் (21) செல்போன் மூலம் நட்பு ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது.

இந்நிலையில் பிளஸ்–2 தேர்வு எழுத விருப்பம் இல்லாததால் நான் கார்த்திகேயனுடன் வீட்டைவிட்டு ஓடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். கார்த்திகேயனை செல்போனில் தொடர்பு கொண்டு சிங்காநல்லூருக்கு வரவழைத்தேன்.

பின்னர் காந்திபுரத்திற்கு வந்தோம். அங்கு ஓட்டலில் சாப்பிட்டோம். அப்போது கார்த்திகேயன் பணம் இருந்தால் ஜாலியாக உல்லாச வாழ்க்கை வாழலாம் என்றார்.

நான் என் பெற்றோரை பணம் கேட்டு மிரட்டும்படி கூறினேன். அவரும் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டினார்

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறி இருந்தார்.

போலீசார் மாணவி சுகன்யாவிடம் இனிமேல் இதுபோன்ற தவறு செய்ய மாட்டேன் என்று எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பினர். மைனர் பெண்ணை கடத்தியதாக மாணவர் கார்த்திகேயன் மீது வழக்குபதிவு செய்து ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Loading