Ramadoss

தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா ? என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி விளக்கமளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அழகிரியின் ஆதரவாளர்களாக இருந்து ஸ்டாலின் ஆதரவாளர்களாக மாறிய சிலர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அழகிரி அணியில் இருந்த சிலரின் தூண்டுதலால் தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி வழக்குகள் தொடரப்பட்டதாகக் கூறி, திமுகவிலிருந்து சிலர் நீக்கப்பட்டதாகவும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் மீதான நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த காரணத்தால் தான் அழகிரி நீக்கப்பட்டதாக திமுக கூறியிருக்கிறது என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக தான் கடந்த 2012 ஆம் ஆண்டு கூறியது பற்றி, அப்போது பதிலளித்த கருணாநிதி, சாதி பிரச்னையை கிளப்புவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன் மீதே குற்றம் சாட்டியதை ராமதாஸ் நினைவு கூர்ந்துள்ளார்.

ஆனால், தற்போது திமுகவைச் சேர்ந்த சிலர் மீது அதே கட்சியினர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி வழக்கு தொடர்ந்திருப்பதாக கருணாநிதி கூறியிருக்கிறார் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது தெளிவாகி இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

ஒருவேளை வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை எனில், திமுகவினர் மீது அளிக்கப்பட்டுள்ள புகார்கள் அனைத்தும் உண்மையா? என்பதை கருணாநிதி விளக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Loading