கல்வியல் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழும் ஜெயலலிதா

jayalalitha

எனது தலைமையிலான அரசைப் பொறுத்த வரையில், பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்களை வித்தை காட்டி குழந்தையை ஏமாற்றுபவர்களோடு ஒப்பிட்டு இதே சட்டமன்றத்தில் பேசினேன். இதைப் புரிந்து கொண்ட மக்கள், 2011_ஆம் ஆண்டு அவ்வாறு ஏமாற்றியவர்களை தூக்கி எறிந்தார்கள். மக்கள் வாழ்வில் வளம் பெற வேண்டுமென்றால், மாநிலம் செழிக்க வேண்டுமென்றால், மனித வள வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இந்த கொள்கையைத்தான் எனது அரசு பின்பற்றி வருகிறது. எனவே தான், எதிர்கால சந்ததியினருக்கு பயன்தரக் கூடிய கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டுக்கும் நான் முக்கியத்துவம் அளித்து வருகிறேன்.

கல்வியே, சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிகோலும் என்பதால், அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட,

சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் கல்வி அறிவை பெறும் வகையிலான திட்டங்கள் எனது அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டில், பள்ளிக் கல்விக்கென 16,965 கோடியே 37 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2010_2011_ஆம் ஆண்டு, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் பள்ளிக் கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை 11,274 கோடியே 75 லட்சம் ரூபாய் ஆகும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு. விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், நான்கு இணை சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள், கணித உபகரணப் பெட்டிகள், கிரையான்ஸ் மற்றும் வண்ணப் பென்சில்கள், புவியியல் வரைபடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு, கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதுதவிர, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் குறித்த நேரத்தில் பள்ளி செல்ல வசதியாக விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்படுகின்றன. மடிக்கணினிகளும் வழங்கப்படுகின்றன.

இடை நிற்றலைக் குறைக்கும் பொருட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் 11_ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு தலா 1,500 ரூபாயும், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு தலா 2,000 ரூபாயும் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு, மாணவ மாணவியர் மேல்நிலைக் கல்வியை முடித்தவுடன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் மட்டும் இந்தத் திட்டத்தின்மூலம் கிட்டத்தட்ட

23 லட்சம் மாணவ, மாணவியர் பயன் அடைந்துள்ளனர்.

வருவாய் ஈட்டும் பெற்றோரை இழக்க நேரிடும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியரின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பெயர்களில் 50,000 ரூபாய் பொதுத் துறை நிறுவனத்தில் வைப்பு நிதியாக செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,080 மாணவ மாணவியர் பயன் அடைந்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துச் செல்லும் மாணவ மாணவியர் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்வதற்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்குச் சென்று அலைவதை தவிர்க்கும் வகையில், இந்தப் வேலைவாய்ப்பு பதிவு முறையை பள்ளிகளிலேயே நாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதேபோன்று சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ் ஆகியவற்றையும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் இடமிருந்து பள்ளித் தலைமை ஆசிரியர் பெற்று மாணவ, மாணவியருக்கு வழங்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவ, மாணவியர் மன அழுத்தமின்றி, தேர்வு பயமின்றி மகிழ்ச்சியுடன் கல்வி கற்க ஏதுவாக, முப்பருவ முறை திட்டம் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு பாடநூல் வழங்கப்படுவதால், மாணவ மாணவியரின் கடுமையான புத்தகச் சுமை குறைக்கப்பட்டு உள்ளது. மாணவர்களது படைப்புச் சிந்தனை மற்றும் திறன்களை வளர்க்கும் செயல்பாடுகள் பாடநூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியரின் மன அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு, நகரும் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இதுவரை 46,794 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

மாணவர்களது ஒருமுகத் தன்மையை மேம்படுத்துதல், பகுப்பாய்வுத் திறன் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறனை அதிகரித்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு சதுரங்க விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இதற்கான போட்டிகளில் 11 லட்சத்து, 25 ஆயிரத்து 628 மாணவ மாணவியர் பங்கு பெற்றுள்ளனர்.

மாணவ மாணவியர் தரமான கல்வியை பெற வேண்டுமெனில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் 68,481 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நான் உத்தரவிட்டுள்ளேன். இதுநாள் வரை 51,757 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டது என்பதையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரே நாளில் 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சாதனை புரிந்த அரசு எனது தலைமையிலான அரசு என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் அல்லாத பணியிடங்களை பொறுத்த வரையில் இதுவரை, 19,673 பணியிடங்களுக்கு என்னால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 10,220 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.

பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன், நடப்பு நிதியாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 366 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேவைக்கேற்ப புதிய தொடக்கப் பள்ளிகளை ஆரம்பித்தல், தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாகவும், உயர் நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. 300_க்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள இடத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றுவட்டத்தில் தொடக்கப் பள்ளிகள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 54 புதிய தொடக்கப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 1,125 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வியுறும் மாணவ மாணவிகள் அதே ஆண்டிலேயே உயர் கல்வியை தொடர ஏதுவாக, தேர்ச்சி பெறாத பாடங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், அனைத்து பாடங்களையும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் உடனடித் தேர்வு எழுத அனுமதித்தல், புகைப்படம், இருபரிமாணப் பட்டக் குறியீடு மற்றும் கூடுதல் ரகசிய குறியீடு ஆகியவற்றுடன் கூடிய பொதுத் தேர்வுக்கான சான்றிதழ்கள் வழங்குதல் என பல்வேறு புதுமையான நடவடிக்கைகள் எனது தலைமையிலான அரசால் எடுக்கப்பட்டு உள்ளன.

பள்ளிக் கல்வியில் இவ்வாறு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதன் காரணமாகவும், மேல்நிலை வகுப்புகளில் இடை நிற்றலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாகவும், பத்தாம் வகுப்பு பயின்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2010_2011_ஆம் ஆண்டு 8 லட்சத்து 38 ஆயிரத்து 165 என்று இருந்த பத்தாம் வகுப்பு மாணவ மாணவியரின் எண்ணிக்கை, 2013_2014 ஆம் ஆண்டு 11 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பை பொறுத்த வரையில், 2010_2011 ஆம் ஆண்டு 7 லட்சத்து 16 ஆயிரத்து

543 என்று இருந்த எண்ணிக்கை; 2013_2014 ஆம் ஆண்டில் 8 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

தேர்ச்சி விகிதத்தை எடுத்துக் கொண்டால், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85.3 விழுக்காடு என்றிருந்த தேர்ச்சி விகிதம், 2013 ஆம் ஆண்டு 89 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதே போன்று, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85.9 விழுக்காடாக இருந்த தேர்ச்சி விகிதம், 2013 ஆம் ஆண்டு 88.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

உயர் கல்வியை எடுத்துக் கொண்டால், திருச்சிராப்பள்ளி, தேனி, தர்மபுரி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 11 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. 24 பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது. கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிக்கென 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் ஒரு கல்விப் புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறோம். விரைவில் 100 விழுக்காடு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் திகழும் என்பதை மிகுந்த பெருமிதத்துடன் இந்த மாமன்றத்திற்கு நான் தெரிவித்துக் கொள்ள கடமைபட்டு இருக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு