காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கியுள்ள இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ‘ஸ்கீம்’ (செயல்திட்டம்) ஒன்றை 6 வார காலத்துக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்று தனது தீர்ப்பில் கூறி உள்ளது. நடுவர் மன்றம் தனது இறுதித்தீர்ப்பில் நீர் பங்கீட்டை மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தது.

எனவே சுப்ரீம் கோர்ட்டு, இந்த இரண்டு அமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்பதைத்தான் ‘ஸ்கீம்’ என்று கூறியது என்பது பெரும்பாலானோரின் கருத்து. இதன் அடிப்படையிலேயே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மத்திய அரசும் இதுபற்றி கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் மே மாதம் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினையில் மத்திய அரசு அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள 6 வார ‘கெடு’ இன்றுடன் முடிந்தது. ‘கெடு’ முடியும் நாள் வரை காத்திருக்கப்போவதாக தமிழக அரசு ஏற்கனவே கூறியது.

சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளபடி செயல்திட்டத்தை ஏற்படுத்த தவறினால், மத்திய அரசு கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். இன்று மாலை வரையில் மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

காவிரி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்பதன் பொருள் என்ன? என்பது குறித்து விளக்கம் கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வருகிற சனிக்கிழமை மனு தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது என தகவல் வெளியாகியது.

அதைப்பற்றிய சில கருத்துக்கள்

“மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை எனில் டெல்லி சென்று தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை உச்சநீதிமன்ற தீர்ப்பை எந்த பிரதமரும் மீறியதில்லை; ஆனால் பிரதமர் மோடி மீறியுள்ளார்.” – அய்யாக்கண்ணு

“காவிரி விவகாரத்தில் கடைசி நேரத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி என்ன ஆகப்போகிறது?” – திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன்.

“உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு திட்டமிட்டு துரோகம் செய்திருக்கிறது. மத்திய அரசின் இந்த துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்’. உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, முதல்கட்டமாக,நாளை முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்” – அன்புமணி ராமதாஸ்

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்; கட்சி வேறுபாடுகள் இன்றி எம்.பி.க்கள் போராடியும் மத்திய அரசு திட்டமிட்டு புறக்கணித்தது” – சீமான்

“காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழக மக்களை மத்திய அரசு வஞ்சித்துவிட்டது” – தேமுதிக தலைவர் விஜயகாந்த்

“கர்நாடக தேர்தலை மனதில் வைத்து, தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைய, அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்து எதிர்ப்பு தெரிவிப்பதே சிறந்தது.” – தொல்.திருமாவளவன்

“காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்கவில்லை.” – தமிழ்நாடு காங். கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர்.

“கர்நாடகத்தின் கையில் உள்ள அதிகாரத்தை பிடுங்கி மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் இந்தியா என்ற ஒருமைப்பாடு நீங்கிவிடும்” – பழ.கருப்பையா

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால், சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் ”- புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் செய்தி குறிப்பு வெளியீடு.

“காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும்”. – ரஜினிகாந்த்

“உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும்” – வைரமுத்து

“காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது; வாக்கு வங்கி இல்லாததால் தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்றுகிறது.” – இயக்குநர் அமீர்

“மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்த பிறகு ஒவ்வொருவரும் ஒரு விவசாயிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.” – நடிகர் சிவகார்த்திகேயேன்

“ஆசியாவின் மிகப்பெரிய சமவெளிப் பகுதிகளுள் ஒன்று காவிரி டெல்டா. அது அழிவது தமிழகத்திற்கு மட்டுமல்ல., இந்தியாவிற்கே கேடு. காவிரி டெல்டாவை வறட்சியிலிருந்து காப்பாற்ற மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே தீர்வு.” – இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்

Loading